கரூர் கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு வரும் மார்ச் 17-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அதை அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்த அதிகாரிகள் சம்மன் எதையும் அளிக்கவில்லை என்றும், தனது அலுவலகத்திற்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ முன்னதாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 10) காலை சிபிஐ அனுப்பிய மின்னஞ்சல் சம்மனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிபிஐ சம்மன் குறித்து ஊடகங்களில் முரணான தகவல்கள் வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், விசாரணை அமைப்பின் அழைப்பை ஏற்று மார்ச் 17-ம் தேதி நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கப் போவதாக உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் ஆஜராக 15 நாட்கள் அவகாசம் கோரியுள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
