கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த விஜயிடம், சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் கிடைத்துள்ள சில புதிய தகவல்கள் குறித்து விஜயிடம் கூடுதல் விளக்கம் பெற வேண்டியிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ள இந்தச் சம்மன் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தவெக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள சூழலில், கூட்டணிக் கணக்குகளுக்காக அரசியல் அழுத்தம் காரணமாகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஒரு தரப்பினர் சந்தேகம் எழுப்புகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் சிபிஐ-யின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
