நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்', தணிக்கை சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில், தற்போது ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
தொடர்கதையான சட்டப்போராட்டம்
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் ஏற்பட்ட இழுபறியால் முடங்கியது. தனி நீதிபதியின் உத்தரவு, அதைத் தொடர்ந்து தணிக்கை வாரியத்தின் மேல்முறையீடு மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்ற சட்டப் போராட்டங்கள் என கடந்த ஒரு மாதமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்
இந்த விவகாரத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும், சுமூகமாகப் படத்தை வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளது. நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை வரவிருந்த நிலையில், வழக்கை வாபஸ் பெறுவதாக தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் கடிதம் வழங்கியுள்ளார்.
படத்தை மறு ஆய்வுக்கு (Re-examination) அனுப்பத் தயாரிப்பு நிறுவனம் சம்மதித்துள்ளதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகத் தெரிகிறது.
விரைவில் தணிக்கைச் சான்றிதழ்
தணிக்கை வாரியம் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கிவிட்டு, படம் தற்போது மறு ஆய்வுக்குச் சென்றுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சான்றிதழ் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஏக்கத்தில் ரசிகர்கள்
பொங்கலுக்கு வெளியான மற்ற திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளைக் கடந்து ஓடிடி (OTT) தளத்திற்கே வந்துவிட்ட நிலையில், விஜய்யின் படம் மட்டும் இன்னும் வெளியாகாதது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள இந்த இணக்கமான முடிவு, 'ஜனநாயகன்' படத்தை விரைவில் திரையில் காண்போம் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடையே விதைத்துள்ளது.அடுத்த வாரம் வெளியாகப்போவது 'U/A' சான்றிதழா அல்லது வேறு மாற்றங்கள் இருக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!?
