தமிழக வெற்றி கழகத்தில் நான்கு அதிமுக தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு இணைந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த சூழலில் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடம் பெற்று கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இதற்கிடையில் மே 13ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். இது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது.
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்யபாமா, ஹரி, கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், மரகதம் வெற்றிவேல், எஸ்.எம். சுகுமார், எஸ்.சேகர், திலீபன், ஜெய்சங்கர், என்.எஸ்.என்.நடராஜன், மோகன், ரவி, ராகேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஹரி பாஸ்கர், அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகிய 25 பேர் தனி அணியாக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
தமிழக வெற்றி கழகம் இந்த 25 எம்எல்ஏக்களுடன் குதிரை பேரம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் பொதுச் செயலாளர் என்றும், திமுகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சியை பிடிப்பதை தாங்கள் விரும்பவில்லை எனவும் இந்த 25 எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவை சரி செய்ய எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அதன் பலனாக எதிர் தரப்பிலிருந்து ஒவ்வொரு எம்எல்ஏக்களாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தான் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகிய நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் திடீரென இணைந்து விட்டனர்.
இதனால் தவெக அரசு குதிரை பேரம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வரும் நிலையில் தாங்கள் அதிமுகவிலிருந்து விலகியதற்கான காரணத்தை இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.அதாவது திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளிக்கும் அணியில் நான் உட்பட பலரும் இடம் பெற்றிருந்தோம். ஆனால் எங்களுக்குள் இருந்த மனக்கசப்புகள் வெடிக்க தொடங்கிய நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு நான் இங்கு இணைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரண்ட 25 எம்எல்ஏக்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது உறுதியாகியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக எதிர்த்து நின்ற எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரிந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்று சேருவார்களா அல்லது தொடர்ந்து அதிமுக பிளவுப்பட்டு கொண்டே இருக்குமா என்பது தெரியாமல் அக்கட்சியின் ரத்தத்தின் ரத்தங்கள் தவித்து வருகின்றனர்.
