"நோகுதய்யா மனசு நோகுதய்யா..." ஜெயலலிதா ஆன்மாவிடம் மன்னிப்புக் கேட்டு அதிமுகவில் இருந்து விலகினார் செம்மலை!

நிர்வாகிகளின் ஈகோ மற்றும் உட்கட்சிப் பூசலால் அதிமுக பலவீனமடைந்து வருவதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர் செம்மலை தனது கட்சிப் பதவிகளை கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்துள்ளார்.

M

எழுதியவர்

2 நாட்களுக்கு முன்
"நோகுதய்யா மனசு நோகுதய்யா..." ஜெயலலிதா ஆன்மாவிடம் மன்னிப்புக் கேட்டு அதிமுகவில் இருந்து விலகினார் செம்மலை!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து திடாரென விலகியுள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள உணர்ச்சிப்பூர்வமான கடிதத்தில், சமீபகாலமாக அதிமுகவில் அரங்கேறி வரும் அடுத்தடுத்த கசப்பான நிகழ்வுகள் தனக்கு சொல்லொணா மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்னைப்போலவே, கட்சி தொடங்கப்பட்ட காலம் தொட்டு ரத்தம் சிந்தி உழைத்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இதேபோன்ற கடுமையான மன உளைச்சலில்தான் தவித்து வருகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கற்பூரம் கரையலாம்... கட்சி கரையலாமா?

அதிமுகவில் தற்போது அரங்கேறி வரும் உட்கட்சி விவகாரங்கள் எதுவும் திருப்திகரமாக இல்லை என்றும், மாறாக பெரும் கவலையையே அளிப்பதாகவும் செம்மலை வருத்தம் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். பாடுபட்டு உருவாக்கிய, ஜெயலலிதா கண்ணும் கருத்துமாகக் காத்த இந்த இயக்கத்திற்கு இப்படியொரு நிலைமையா என்ற உள்மனதின் குமுறலே தற்போதைய வெளிப்பாடு என்று கூறியுள்ளார். "கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா" என்ற வேதனை எல்லா தொண்டர்களின் மனதிலும் எதிரொலிப்பதாகக் கூறிய அவர், அதிமுகவின் உட்கட்சிப் பூசலால் கட்சி நாறிக்கொண்டிருக்கிறது என்று முன்னணி ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டதாக சாடியுள்ளார்.

வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் தொடர்ந்த விசுவாசம்

மறைந்த ஆளுமைமிக்க தலைவர்களான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தனக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி, அரசியல் வானில் ஒரு ஒளிரும் நட்சத்திரமாக அடையாளப்படுத்தியதை செம்மலை நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார். அந்த நன்றிக் கடனுக்காகவும், தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கவும் தனது அரசியல் அனுபவத்தை சுயநலமின்றி இந்த இயக்கத்திற்கு அர்ப்பணித்து வந்ததாகக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தனக்குப் பல முக்கிய வாய்ப்புகள் திட்டமிட்டே மறுக்கப்பட்டபோதும், தடுக்கப்பட்டபோதும், தான் அதைப் பொருட்படுத்தாமல் தலைமைக்குக் கட்டுப்பட்டு விசுவாசத்துடன் பணியாற்றியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைவர்களின் ஆன்மாவிடம் மன்னிப்புக் கோரிய செம்மலை

முன்னாள் முதல்வர்களுடன் பயணித்த அந்தப் பொற்கால அரசியலை தற்போதைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தத் தற்போதைய அமைப்பில் தொடர்ந்து நீடிக்க தனது மனசாட்சி இடம் தரவில்லை என்று செம்மலை உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தன்னை இந்த அளவிற்கு ஆளாக்கி அழகு பார்த்த அந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், தான் கட்சித் தலைமையிலிருந்து விலகும் இந்த கடினமான முடிவிற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், மிகுந்த கனத்த இதயத்துடனேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தனது கடிதத்தில் அவர் விவரித்துள்ளார்.

ஈகோவால் முடங்கிய அதிமுக... செய்தியாளர்களிடம் ஓப்பந்தம்

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செம்மலை, வழக்கமாக உங்களை மகிழ்ச்சியோடு சந்திக்கும் நான், இன்று மிகுந்த மனவருத்தத்துடன் சந்திக்கிறேன் என்று பேசத் தொடங்கினார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி பலவீனமடைந்து வருவதை நெஞ்சு பொறுக்காமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் கவனித்து வருகிறார்கள் என்றார். கட்சியைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளிடையே நிலவும் தனிப்பட்ட ‘ஈகோ’ தான், கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது என்றும், அவர்களுக்குக் கட்சியை வளர்க்கும் எண்ணமே இல்லை என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

விஜய்யை குறை சொல்ல முடியாது...

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய், தற்போதைய அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று செம்மலை அதிரடியாகக் குறிப்பிட்டார். கட்சியை ஒரு வலுவான இயக்கமாகக் காட்ட தற்போதைய தலைமை தவறிவிட்டதே இதற்குக் காரணம் என்றும், இதில் நாம் விஜய்யைக் குறை சொல்ல முடியாது என்றும் அவர் நியாயம் கற்பித்தார். அதேநேரம், தேர்தல் தோல்விக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி தான் காரணம் என்ற விமர்சனத்தை அவர் மறுத்தார். எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்த போதிலும், மற்ற நிர்வாகிகளின் உட்கட்சிப் பூசல் காரணமாகவே வெற்றி வாய்ப்பு நழுவியது என்றார். மேலும், எஸ்.பி.வேலுமணியின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...