அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ போன்றோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவால் மிகப்பெரிய மாற்றம்
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கூட்டணி அமைச்சரவைக்கும் முதலமைச்சர் விஜய் அச்சாரமிட்டுள்ளார். இதன் காரணமாக தவெக மீது பிற அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய அளவில் மதிப்பு அதிகரித்துள்ளது. காரணம் காலம் காலமாக அதிகாரத்தில் திமுக மற்றும் அதிமுக மட்டுமே இருந்து வந்தது. கூட்டணியில் இருந்த கட்சிகளை வெறும் வாக்கு வங்கிக்காக மட்டுமே இவ்விரு கட்சிகளும் பயன்படுத்தி வந்தது.
இந்த நிலையில் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு தருவேன் என சொல்லி, அதனை நிரூபித்தும் காட்டியுள்ளார்.
காலியாகும் அதிமுக கூடாரம்
இதனிடையே இந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை தன் பக்கம் ஈர்த்த தமிழக வெற்றிக் கழகம், மறுபக்கம் அதிமுகவை காலி செய்யும் பணியில் களமிறங்கியுள்ளது. முதற்கட்டமாக அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த பலரும் ஆங்காங்கே தவெகவில் தங்களை இணைத்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய அதிர்ச்சியில் இருந்து வருகிறார்.
ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களில் ஒரு தரப்பு தவெகவுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றதால் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு உண்டானது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் போராடி அந்த பிரச்னையை சரி செய்தார். இப்போது என்னவென்றால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், சிவபதி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம், ராஜவர்மன், விகேஆர் சீனிவாசன், கோவிந்தசாமி, சுந்தரராஜூ, ராஜமுத்து, மான்ராஜ், முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக கூடாரம் காலியாகி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் அவர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
