தமிழக மாநிலத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் 2026-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். இந்த புதிய பட்டியலின்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்தமாக 2,89,60,838 பெண் வாக்காளர்களும், 2,77,38,925 ஆண் வாக்காளர்களும், 7,617 மூன்றாம் பாலினத்தவர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 18 முதல் 19 வயதிற்குட்பட்ட சுமார் 12.51 லட்சம் புதிய வாக்காளர்கள் முதல்முறையாக ஜனநாயகக் கடமையாற்றத் தயாராக உள்ளனர்.
அதிரடியாகக் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை
கடந்த 2025-ஆம் ஆண்டில் 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 5.67 கோடியாகக் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் தீவிரத் திருத்தப் பணிகள் மூலம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 74 லட்சம் நபர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.அதே சமயம், திருத்தக் காலத்தின் போது சுமார் 27.53 லட்சம் தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தொகுதி வாரியான நிலவரம்
தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகச் செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி (5,36,991 வாக்காளர்கள்) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, சென்னை மாவட்டத்தின் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி (1,16,896 வாக்காளர்கள்) மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.
தொடரும் பெயர் சேர்க்கை வாய்ப்பு
பொதுமக்கள் தங்கள் பெயர்களை voters.eci.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 'Voter Helpline' செயலி மூலமோ சரிபார்த்துக் கொள்ளலாம். பட்டியலில் பெயர் இல்லாத தகுதியுள்ள நபர்கள், படிவம் 6-ஐ சமர்ப்பித்துத் தொடர் திருத்தக் காலத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
