தமிழக அரசியல் களத்தில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. அதிமுகவை ஊழல் கட்சி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான வருமான வரித்துறை விவகாரத்தை முன்வைத்து அதிமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்
எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பேசுகையில், "விஜய் ஊழல் செய்துள்ளதாக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்டது. வரி ஏய்ப்பு செய்ததன் மூலம் அவரது உண்மை முகம் தெரிந்துவிட்டது," எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்குப் பிறகு விஜய் சுமார் 75 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும், ஒரு கட்சியின் தலைவர் துணிச்சலாக நின்று பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, வீட்டிற்குள் முடங்கக் கூடாது என்றும் கடுமையாகச் சாடியிருந்தார்.
தவெக நிர்வாகி அருண்ராஜ் பதிலடி
எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனங்களுக்கு தவெக நிர்வாகி அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார் "முன்னாள் முதலமைச்சராக இருந்தவருக்கு ஊழல் தடுப்புச் சட்டத்திற்கும், வரி தொடர்பான வழக்குகளுக்கும் வித்தியாசம் தெரியாதது பரிதாபமாக உள்ளது. இதனை ஊழல் என்று சொல்வது முறையல்ல. காலதாமதமாக வந்த தீர்ப்பை எதிர்த்து சட்டப்படி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது; அது குறித்துத் தலைவர் முடிவெடுப்பார்."
"விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். தவெக யாரையும் நம்பித் தொடங்கப்பட்ட கட்சி அல்ல; தனித்து நின்று வெற்றிபெறும் வலிமை எங்களுக்கு உள்ளது. இருப்பினும், கூட்டணி குறித்த இறுதி முடிவைத் தலைவர் விஜய் அறிவிப்பார்." என அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி 13-ல் தவெக ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், தவெகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்குச் சேலம் காவல்துறை 51 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
