சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தைரியமாகத் தட்டிக்கேட்ட விஷ்ணு என்ற 23 வயது இளைஞர் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஆட்சியில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டால் கொலைதான் பதிலா என்றும், இதுதான் தவெக அரசு சொன்ன மாற்றமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரிகள் நியமனமும் இபிஎஸ்-இன் விமர்சனமும்
நேற்று திருச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், தன் மீது வீண் பழி போடுவதாக ஆதங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள இபிஎஸ், வெறும் அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது என்று கூறியுள்ளார். இதே அதிகாரிகள் தான் எல்லா ஆட்சிகளிலும் பணிபுரிகிறார்கள் என்பதால், உண்மையான மாற்றம் என்பது ஆட்சியாளர்களிடம் தான் வரவேண்டும் என்றும், காவல்துறையைக் கையில் வைத்திருப்பவர் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடானது என்றும் விமர்சித்துள்ளார். மேலும், போதைப்பொருளைத் தன்னால் ஒழிக்க முடியாது என்று முதலமைச்சர் மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
சிங்கப்பெண் அதிரடிப்படை தாமதத்திற்கு சாடல்
பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண் அதிரடிப்படை' அடுத்த வாரம் துவக்கப்படும் என்ற அறிவிப்பைக் கடுமையாக விமர்சித்துள்ள இபிஎஸ், கடந்த வாரமே அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தும் கடைசி நிமிடத்தில் ஏன் ரத்து செய்யப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். தனது உதவியாளர் வீட்டு விழாவைச் சிறப்பிப்பதற்காகத் தமிழகப் பெண்களின் பாதுகாப்பை முதலமைச்சர் சமரசம் செய்து கொண்டாரா என்றும், ஆட்சி நடத்துவது எப்படி என்று முதலமைச்சர் 6 மாத கிராஷ் கோர்ஸ் முடிக்கும் வரை மக்கள் மடிந்து கொண்டே இருக்க வேண்டுமா என்றும் ஆக்ரோஷமாக வினவியுள்ளார்.
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டு
தூத்துக்குடி அருகே நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை இபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 3 வாரங்களில் மட்டும் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடூர குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஒரு கட்சித் தலைவராகத் தன் கட்சியினரைக் கூட அடக்கி வைக்கத் துப்பில்லாதவர் எப்படி மாநிலத்தின் காவல்துறையை நிர்வகிப்பார் என்று சாடியுள்ளார்.
மாய உலகிலிருந்து வெளியே வர அறிவுரை
தான் வகிக்கும் உயர் பொறுப்பின் தன்மையை உணராமல், முதலமைச்சர் இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இந்த பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சர் தற்போதாவது அந்த மாய உலகிலிருந்து வெளியே வந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தலையாய பணியில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!
