'தினமணி ஈகைப் பெருநாள் மலர் - 2026' வெளியீட்டு விழா, நேற்று மாலை எழும்பூரில் சிறப்பாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த மலர், இந்த ஆண்டும் பல்வேறு சிறப்புக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. இந்த விழாவிற்கு தினமணி நாளிதழின் ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின் (IFT) துணைத் தலைவரான டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் புதிய மலரை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். வெளியிடப்பட்ட மலரின் முதல் பிரதியை, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
சமூக நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்ற மாநிலம்
இந்நிகழ்வில் பேசிய இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் துணை தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், "இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்தும், பிற சமயங்களைப் பற்றிய புரிதல் மக்களிடையே மிகக் குறைவாக இருப்பதே பல சிக்கல்களுக்குக் காரணம். சிறுபான்மைச் சமுதாயத்தைப் பற்றிய செய்திகள் பெரும்பான்மை மக்களுக்குச் சென்றடைவது அரிதாக உள்ளது; அந்த குறையை இந்த மலர் நீக்குகிறது. தமிழ்நாடு இயற்கையாகவே சமூக நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்ற மாநிலம். முல்லை பெரியார் மற்றும் காவிரிப் பிரச்சனைகளின் போது கூட மற்ற மாநிலத்தவர்கள் இங்கே தாக்கப்படாத சகிப்புத்தன்மையைத் தமிழ் மண் கொண்டுள்ளது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தமிழ் பண்பாடும், மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போல் சமமானவர்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனையும் இணையும் இடமாகத் தமிழகம் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
வெறுப்பு அரசியலை ஒழியட்டும்
இந்நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், "இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர்களுக்கு வெளியே இருப்பவர்களுக்குச் சரியான புரிதல் தேவை. தற்போது நிலவும் வெறுப்பு அரசியலை ஒழிக்க, இது போன்ற புத்தகங்களும் மலர்களும் மிக முக்கியமான ஆயுதங்கள். ஒரு வெகுஜனப் பத்திரிகையான தினமணி இத்தகைய முயற்சியை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, நேதாஜியின் ஐ.என்.ஏ படைக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்த ஹபீப் மற்றும் காந்தியடிகளுக்கு வெற்று காசோலை (Blank Cheque) வழங்கிய ஜமால் முகமது சாஹிப் ஆகியோரின் தியாகங்களை நினைவுகூர்ந்தார். இறுதியாக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் இக்காலத்திற்குத் தேவையான ஒரு சிறந்த முன்னெடுப்பைச் செய்துள்ளார் என்று பாராட்டித் தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்வின் முடிவாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே நிஜாமுதீன் ஏற்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து IFT அறங்காவலர் என்.அதாவுல்லாஹ் நன்றியுரை வழங்கினார். சுமார் 70 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மலரில், இஸ்லாமிய மார்க்கத்தின் விழுமியங்கள், மத நல்லிணக்கச் சிந்தனைகள் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் ஆழமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வெளியீட்டு விழாவில் ஏராளமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
