சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் முன்னேற்றத்தில் கல்வி வகிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "பெண்கள் இயல்பாகவே அழகானவர்கள் தான், ஆனால் அவர்களுக்கு உண்மையான அழகையும் பெருமையையும் சேர்ப்பது அவர்கள் கற்கும் கல்வி எனும் அணிகலன் தான்" என்று அவர் குறிப்பிட்டார்.
அரசு திட்டங்களின் தாக்கம்:
திமுக அரசின் கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல குடும்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்
புதுமைப்பெண் திட்டத்தின் விளைவாக தமிழகத்தில் பெண்களின் உயர்கல்வி சேர்க்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. நான் முதல்வன் நகர்ப்புறங்களை விட கிராமப்புற மாணவிகள் இத்திட்டத்தால் அதிகளவில் திறன் மேம்பாடு அடைந்துள்ளனர்.
காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பசியின்றி கல்வி கற்று வருகின்றனர்.
மாணவிகளுக்கு அறிவுரை:
வெற்றி என்பது எளிதில் கிடைப்பதல்ல என்பதை வலியுறுத்திய முதலமைச்சர், "வெற்றிக்கு குறுக்கு வழிகள் கிடையாது; கடின உழைப்பும் விடாமுயற்சியும் மட்டுமே உங்களை சாதனையாளர்களாக மாற்றும். உங்கள் உயர்வுக்காக உழைப்பையும் பொருளையும் செலவிடும் பெற்றோருக்கு, உங்களைப் பற்றி மற்றவர்கள் பெருமையாகப் பேசும் தருணமே மிகப்பெரிய பரிசாகும்" என்றார்.
மேலும், இன்றைய போட்டி நிறைந்த உலகில் வெறும் ஒரு பட்டப்படிப்பு (Degree) மட்டும் போதாது என்றும், காலத்திற்கேற்ப தங்களைத் தகுதியாக்கிக்கொள்ளத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பொருளாதாரத்தில் தமிழகத்தின் எழுச்சி:
"ஒரு காலத்தில் வறுமையில் வாடிய தமிழ்நாடு, இன்று இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் நமது மாநிலம் வளர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் அதிகளவிலான பெண்கள் பணிபுரியும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. ஒரு பெண் வேலைக்குச் சென்றால் அந்தத் தலைமுறையே முன்னேறும். நீங்கள் படித்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதுதான் எனக்குத் தரும் உண்மையான நன்றிக்கடன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசித் தனது உரையை நிறைவு செய்தார்.
