தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்ந்து இரண்டாவது நாளாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காதது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லாத நிலையில் ஐந்து கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். கடந்த மே 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில் அதனை தொடர்ந்து நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை கூடி அதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எம்எல்ஏக்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அரசியல் தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற விஜய்
இப்படியான நிலையில் நேற்று சட்டப்பேரவை முடிந்தவுடன் முதலமைச்சர் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நேரடியாக சென்று வாழ்த்து பெற்றார். அவரை வாசலில் வந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டுக்கு சென்று வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய்.
பின்னர் அக்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இல்லம் மற்றும் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கும் அவர் சென்று வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் விஜய் செய்த இந்த செயல்கள் அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தொடரும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு
இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆன இன்றும் முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திற்கும் விஜய் நேரில் சென்று அங்கு அக்கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, தனக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இதன் பின்னர் விஜய் அதிமுக பிளவுபட்டிருக்கும் நிலையில் எம்.எல்.ஏ.,க்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் அடங்கிய குழுவை சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமியை தவிர்க்கிறாரா முதலமைச்சர்?
தொடர்ந்து பிற கட்சித் தலைவர்களையும் சந்திக்கும் முடிவில் இருக்கும் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த இரண்டு நாட்களில் சந்திக்கவில்லை. இது ஏன் என்பது பல்வேறு தரப்பினர் அறிய கேள்வியாக எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியை அவர் சந்திக்காதது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. அந்த வகையில் அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முதலமைச்சர் பதவியில் விஜய் தொடர்வதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் குழு தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
அதேபோல் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்பதற்குள் படாதபாடு பட்டு விட்டார். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக செயல்பட வெளியிலிருந்து திமுக ஆதரவு கொடுப்பதாக ஒரு தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருந்தது. இது கிட்டத்தட்ட உண்மைதான் என்பதை சி.வி.சண்முகம் இன்றைய தினம் வெளிப்படையாக தெரிவித்தார். இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இவற்றையெல்லாம் தாண்டி விஜய் இன்னும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காததற்கு மிக முக்கிய காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை விஜய் தனித்து களம் இறக்கினார். அப்படியாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் வேட்பாளரை அவர் நிறுத்தி இருந்தார். ஆனால் வேட்பு மனு தாக்கலின்போது தவறு செய்து விட்டதாக அந்த வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.
அதேசமயம் அந்த வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விலை கொடுத்து வாங்கி விட்டார் என விஜய் கடுமையாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் தான் முதலமைச்சர் விஜய் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார். அந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருந்தாலும் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு தான் இவர்தான் எங்கள் கட்சியின் ஆதரவு வேட்பாளர் என விஜய் கைகாட்டிய நபர் 50,000 வாக்குகள் மேல் பெற்று அந்த தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்தது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
இப்படியாக தனது அரசியல் பயணத்திற்கு மறைமுகமாக நெருக்கடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமியை விஜய் சந்திக்காமல் தவிர்க்கிறார் அல்லது தாமதமாக சந்தித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார் என்றும், விரைவில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
