தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று முறைப்படி சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில் பதவியேற்ற நிலையில் மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி.சண்முகம் பதவியேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பிற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக மே 10தேதியான நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார். அவருடன் சேர்ந்த 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்ட கருப்பையா நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடிய நிலையில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி பதவி ஏற்க வருகை தந்திருந்தனர். அதன்படி தமிழக வெற்றிக் கழகம், திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் வருகை தந்தனனர். ஆனால் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் இருதரப்பாக வந்தனர்.
அதன்படி எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் சில எம்.எல்.ஏ.,க்களும், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தலைமையில் மற்றொரு அணியும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் முதலில் வரவில்லை. பின்னர் சிறிது நேரம் சட்டமன்றம் வருகை தந்த அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பிளவு ஏற்பட்டுள்ளதற்கு சி.வி.சண்முகம் கை ஓங்கியிருப்பதே காரணமாக சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 2021ம் ஆண்டு கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்த அதிமுக இம்முறை அங்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதேசமயம் வட மாவட்டங்களில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதிமுகவுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி மீது பெரும்பாலானோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அதன் தாக்கமே சி.வி.சண்முகம் தன் தலைமையிலான அணியை உருவாக்கியிருப்பது என கூறப்படுகிறது. சி.வி.சண்முகம் தலைமையிலான அணி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கலாம் என கூறும் நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார். இதனால் சி.வி.சண்முகம் தரப்பு எடப்பாடி பழனிசாமியை பதவியை விட்டு விலகச்சொல்லி போர்க்கொடி தூக்கியுள்ளது.
பிரச்னை தலைக்குமேல் சென்றுள்ளதால் அதிமுக மட்டும் சட்டப்பேரவை கட்சி தலைவரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் தான் சி.வி.சண்முகம் இன்று எம்.எல்.,வாக கூட பதவியேற்கவில்லை. பேரவை நிகழ்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மே 13ம் தேதி விஜய் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதில் அதிமுக தரப்பு என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப்படவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
