தமிழ்நாடு அரசியலில் ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுக சிதறி போய் சின்னாபின்னமாகி வருவது அக்கட்சி தொண்டர்களிடையே கவலையே ஏற்படுத்தியுள்ளது.
கம்பீரமாக இயங்கிய அதிமுக
அதிமுக 1972 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுற்ற பின் அதிமுக இரண்டாக பிரிந்தது. அவர் மனைவி ஜானகி தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தனிமையில் தலைமையில் மற்றொரு அணியும் இயங்கியது. பின்னர் இரு அணியும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்பட தொடங்கியது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதா அதிமுகவை தனது கட்டுக்கோப்பில் வைத்து கட்சியை வழிநடத்தி வந்தார்.
1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் உயிர் இழந்தார்.
அதிமுகவின் பிரிவும் சந்திப்போம்
இதனைத் தொடர்ந்து சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட தொடங்கியது. அவர் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் முதலமைச்சராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவுக்குப் பின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை கடுமையாக எதிர்த்தார். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினார். ஆனால் முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முன் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் சசிகலா ஜெயிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அவர் அறிவித்தார்.
சசிகலா சிறைக்கு சென்ற பின் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனித்தனியாக இயங்கி வந்த அதிமுக ஒரு கட்டத்தில் ஒன்றிணைக்கப்பட்டது. சசிகலா ஓரம் கட்டப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டனர். அதே சமயம் ஆட்சியைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தனர்.
இந்த நிலையில் நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது அதிமுக எதிர்க்கட்சியாக மாறியது.
இந்த நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையில் கட்சி ஏங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவை கூட்டினார். அதில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். ஆனால் அவை யாவும் அவருக்கு ஆதரவாக அமையவில்லை.
ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எத்தனையோ முறை எடப்பாடி பழனிச்சாமியிடம் தங்களை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சினர். எடப்பாடி அசைவு கொடுக்கவில்லை.
உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல், இரு நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் அதிமுக தோல்வியடைந்த நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா வலியுறுத்தினார். ஆனால் எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் அதிமுகவுக்கு தோல்வியை தந்துள்ளது. மேலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் அக்கட்சி மூன்றாம் இடத்திற்கு சென்றது பேரதிர்ச்சியை தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் அவர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக வேண்டும் என பலரும் நினைக்கத் தொடங்கியுள்ளனர். இன்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கிளம்பியுள்ள இதே சி.வி.சண்முகம் எம்எல்ஏ தான் அன்றைக்கு ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவில் வைத்து அவமரியாதை செய்தார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வார்த்தைக்கு ஏற்ப அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி நிலைமை மாறியிருப்பது கர்மா என்றைக்கும் நாம் செய்ததை திரும்ப நமக்கு செய்யும் என அதிமுகவின் நிலைமையை பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சாமானிய மக்களின் எண்ணமாகவும் உள்ளது.
