சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தில், மிக முக்கியத் தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. மின்வாரிய தலைமை அலுவலகத்தின் மேலாண்மைத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த கணினிகளில் இருந்துதான் இந்த ஹார்ட் டிஸ்க்குகள் கழற்றித் திருடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மின்துறை அமைச்சர் ஆய்வுக்குப் பின் நடந்த விபரீதம்
அண்மையில்தான் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மின்வாரியத் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அவர் ஆய்வு நடத்திச் சென்ற சில நாட்களிலேயே இத்தகையதொரு பெரிய முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சில கணினிகளில் கோப்புகள் சரியாகப் பதிவாகாததால், அவற்றை முடுக்கிவிட்டுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முயன்றனர். அப்போதுதான், அந்த முக்கியக் கணினிகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் கழற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் வார விடுமுறை மற்றும் குறைவான பணியாளர்கள் இருந்த சூழலைப் பயன்படுத்தி இந்த திருட்டு அரங்கேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சந்தேகம்
காணாமல் போன இந்த ஹார்ட் டிஸ்க்குகளில், மின்வாரியத்தின் மிக முக்கியமான டெண்டர்களுக்கான ரகசியக் கோப்புகள், கடந்த காலங்களில் நடைபெற்ற நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கியத் தரவுகள் இருந்திருக்கலாம் என உயர் அதிகாரிகள் கருதுகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம், "முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சந்தேகம் உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், செந்தில் பாலாஜி இருந்த காலகட்டத்தில்தான் மின்மாற்றி கொள்முதல் உள்ளிட்டவற்றில் பல்வேறு ஊழல்கள் நடந்து சிபிஐ வரை சென்றதாகக் குறிப்பிட்டார். எனவே, எந்த நோக்கத்தில் இவை திருடப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே முழு விபரமும் தெரியவரும் என்றார்.
போலீசாரின் பிடியில் இருவர்
மின்வாரியத்தைச் சேர்ந்த பெண் உயர் அதிகாரி அளித்த புகாரின் பேரில், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்வாரிய அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகச் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களைப் பிடித்து போலீசார் தற்போது ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்வாரியத்தின் முக்கியத் தரவுகள் தலைமை அலுவலகத்திலேயே திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
