சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு நிகழ்வு, தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டத்தில் பங்கேற்காமல் சோகமான முகத்துடன் திரும்பிச் சென்றது ஏன்? அவர் அவமதிக்கப்பட்டாரா அல்லது பின்னணியில் வேறு ஏதேனும் அரசியல் நகர்வுகள் உள்ளதா? எனக் கேள்வி எழுந்துள்ளது.
அறிவாலயத்தில் நடந்தது என்ன?
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதாக இருந்தது.
ஆனால், துரைமுருகன் வருவதற்கு முன்பாகவே நிகழ்ச்சி தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. கனிமொழி பேசி முடித்ததைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் உரையாற்றத் தொடங்கினார். இந்தச் சூழலில், சற்று தாமதமாக அறிவாலயம் வந்த பொதுச்செயலாளர் துரைமுருகனை வரவேற்க மகளிர் அணியினர் உட்பட யாருமே வெளியில் வரவில்லை என சொல்லப்படுகிறாது.
கட்டமைப்பு மற்றும் கட்சி விதிமுறைப்படி தகுந்த மரியாதையுடன் யாரும் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாததால், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளே இருந்தபோதிலும், துரைமுருகன் நிகழ்ச்சிக்குள் செல்லாமல் சோகமான முகத்துடன் அங்கிருந்து காரில் ஏறித் திரும்பிச் சென்றார். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
பின்னணியில் இருக்கும் பதவிப் போட்டி?
கடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகனை மாற்றிவிட்டு, வேறு ஒருவரை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலுக்கு முன்பாகவே துரைமுருகனை பதவியிலிருந்து விலகுமாறு கட்சியின் முக்கிய தலைகள் சிலர் நிர்பந்தித்ததாகக் கூறப்பட்டது. தற்போது தோல்விக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு பணிகளுக்கு இடையே, அந்தத் திட்டம் வேகம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கட்சியிலும், இதர பொறுப்புகளிலும் துரைமுருகனால் முன்போல தீவிரமாகச் செயல்பட முடியவில்லை. இருப்பினும், அவர் தானாக முன்வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்ய இதுவரை முன்வரவில்லை. இதனாலேயே, அவருக்கு மறைமுகமாகப் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இன்றைய நிகழ்வும் அதன் ஒரு பகுதியோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அறிவாலய அலுவலகத் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் இந்த சர்ச்சையை முற்றிலும் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
