தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பலகட்ட மோதல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் பிறகு ஒரு வழியாக இன்று இனிதே நிறைவடைந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 4-ஆம் தேதியான இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்ய இரு தரப்பிலும் ஒருமனதாக உடன்பாடு எட்டப்பட்டது. முன்னதாக 41 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையுடன் களமிறங்கிய காங்கிரஸ், திமுகவின் பிடிவாதத்தால் தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டது. டெல்லியில் ராகுல் காந்தியுடன் கனிமொழி நடத்திய பேச்சுவார்த்தையும், ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை ப.சிதம்பரம் நேரில் சந்தித்து நடத்திய ஆலோசனையுமே இந்த உடன்பாட்டிற்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திமுக வெறும் 25 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தபோது, அதை காங்கிரஸ் வெளிப்படையாகவே நிராகரித்தது. இதனால் கூட்டணி முறியும் சூழல் ஏற்பட்ட நிலையில், சோனியா காந்தியின் தலையீட்டால் சுமூகத் தீர்வு காணப்பட்டது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் தற்போது ஒரு இடமும், வரும் 2028-ல் மற்றொரு இடமும் தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய உறுதிமொழியை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுக்கும், கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 28 இடங்கள் என இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த உடன்பாட்டின் மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வந்த பல வார கால இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
