தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரமாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீது அடுக்கடுக்கான அதிரடிக் குற்றச்சாட்டுகளையும், அரசியல் விமர்சனங்களையும் முன்வைத்துத் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
தொடர் தோல்விகளும் வாக்கு வங்கிச் சரிவும்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைப் போக்கின் காரணமாகவே நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக இத்தகைய வரலாற்றுப் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதற்கொண்டே அதிமுக தொடர்ச்சியான தோல்விகளை மட்டுமே பெற்று வருவதாகவும், இதனால் கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கி நாளுக்கு நாள் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை ஆராய்ந்து, கட்சியை மீண்டும் பழைய வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், புதிய இளைஞர்களை இயக்கத்தில் பெருமளவில் இணைக்க வேண்டும் என்றும் தாங்கள் தொடர்ந்து தலைமைக்குக் கோரிக்கை விடுத்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
வலிமையான கூட்டணியை உதாசீனப்படுத்திய எடப்பாடி
கடந்த 2024 மக்களவைத் தேர்தல் தோல்விக்கு ராகுப் பிறகு, தாங்கள் 6 முக்கியத் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியதாகச் சண்முகம் வெளிப்படுத்தினார். கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் மீண்டும் ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட பலமான அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியதாகக் கூறினார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்று தாங்கள் வழிகாட்டியதாகவும், தவெக தரப்பிலிருந்தும் கூட்டணி பேசுவதற்காகத் தூது வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், கூட்டணி பேச வந்தவர்களை எடப்பாடி பழனிசாமி முற்றிலும் உதாசீனப்படுத்தியதோடு, தவெக - அதிமுக கூட்டணி எந்தக் காரணத்தைக் கொண்டும் அமைந்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே குறியாக இருந்து அவர்களை வெளியேற்றியதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேபோல தேமுதிகவையும் மிகக் கேவலமாக விமரிசித்துக் கூட்டணியிலிருந்து விரட்டியதாகவும், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட முற்போக்குத் தலைவர்கள் யாரையும் அரவணைக்காமல் சர்வாதிகாரப் போக்கில் தேர்தலைச் சந்தித்ததே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்றார்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்குக் கட்சியில் எந்தப் பதவியும் வேண்டாம், சாதாரண அடிப்படை உறுப்பினராக இருக்கவே சம்மதிக்கிறேன் என்று இறங்கி வந்தபோதும் அவரைச் சேர்த்துக் கொள்ள எடப்பாடி மறுத்துவிட்டதாகச் சண்முகம் சாடினார். ஆனால், இப்போது தேர்தல் முடிந்து தமக்கு ஆபத்து வந்தவுடன் ‘தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்’ என்று பழனிசாமி அறிக்கை விடுவது, கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகும் என்று விமரிசித்தார். இந்த நல்லெண்ணத்தை முன்னரே காட்டியிருந்தால் பழனிசாமி இன்று மீண்டும் முதல்வராகியிருப்பார் என்றும், அதைத் தன் கையால் கெடுத்துவிட்டு இன்று தங்களைப் போன்றவர்களைத் துரோகிகள் போலக் காட்ட முயல்வதாகவும் அவர் வருந்தினார்.
பதவி நீக்கம் சட்டப்படி செல்லாது
தற்போது தங்களுக்கு ஆதரவாகப் பொதுக்குழுவைக் கூட்டக் கையெழுத்திட்ட 31 மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கியிருப்பது சட்டப்படி செல்லாது என்று சி.வி.சண்முகம் அதிரடியாக அறிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, கடந்த மே 11 ஆம் தேதி மோதல் ஏற்படுவதற்கு முன்பாக யாரெல்லாம் கட்சிப் பொறுப்பில் இருந்தார்களோ, அவர்களே பதவியில் நீடிப்பார்கள் என்று தெளிவுபடுத்தினார். அதிமுகவின் சட்டவிதிமுறைகளின்படி 5-ல் 1 பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்றுக் கொடுத்தால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது என்றும், ஆனால் எடப்பாடி பழனிசாமி ஜனநாயகத்திற்கு மாறாகப் பொதுக்குழுவைக் கூட்டக் கூடாது எனச் சுற்றறிக்கை விடுவது கண்டிக்கத்தக்கது என்றும் முழங்கினார். தங்களுக்குப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும், பொதுக்குழுவைக் கூட்டி இருதரப்பும் விவாதித்து எடுக்கும் பெரும்பான்மை முடிவுக்குத் தாங்கள் கட்டுப்படத் தயார் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
