தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடையே நிலவும் கோஷ்டி மோதல் தற்போது கடவுள் முன்னிலையிலேயே பகிரங்கமாகியுள்ளது. விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனுக்கும், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் தரப்பிற்கும் இடையே நீண்டகாலமாக உட்கட்சிப் பூசல் இருந்து வருகிறது. இந்த நிலையில், மணவாளநல்லூரில் உள்ள புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் கோயிலில், ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என எதிர்த்தும் இரு தரப்பினரும் போட்டிப் போட்டுக்கொண்டு 'பிராது' கட்டி வழிபாடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரும் மாவட்டத் தலைவருமான லாவண்யா, தனது ஆதரவாளர்களுடன் சென்று, "ராதாகிருஷ்ணன் தொகுதிக்குச் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார், எனவே அவரே மீண்டும் வேட்பாளராக வேண்டும்" எனச் சீட்டில் எழுதி கோயில் சூலாயுதத்தில் கட்டி வேண்டிக்கொண்டார். ஆனால் இதற்குப் போட்டியாக, மாநில விவசாயப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயகுரு தலைமையிலான எதிரணி, "ராதாகிருஷ்ணன் உள்ளூர் நபர் அல்ல, அவர் சொந்தக் கட்சியினருக்கு எந்த உதவியும் செய்வதில்லை" எனக் குற்றம் சாட்டி, அவருக்கு மீண்டும் சீட் கிடைக்கக் கூடாது என அதே கோயிலில் மற்றொரு பிராது கட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தேர்தல் நெருங்கும் வேளையில், வேட்பாளர் தேர்வை முன்னிட்டு காங்கிரஸார் தங்களுக்குள்ளேயே இப்படிப் பிரிந்து நின்று கோயிலில் முறையிடுவது கட்சித் தலைமையைத் திணறடித்துள்ளது.
