கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் நியூ காலனி பகுதியில் வசித்து வருபவர் பாரதிராஜா (42). இவருடைய 13 வயது மகன் திவிஸ், ஆர்.ஜி. புதூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், மாணவன் திவிஸ் கடந்த 15-ஆம் தேதி பிற்பகலில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள வாய்க்கால் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளான்.
நண்பர்களின் மழுப்பலும் பெற்றோரின் சந்தேகமும்
மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் திவிஸ் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. இதனால் பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த அவனது பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் மகனைப் பற்றி விசாரித்துள்ளனர். அதற்கு அந்தச் சிறுவர்கள், திவிஸ் யாரோ ஒரு மர்ம நபருடன் தனியாகச் சென்றதாக மழுப்பலான பதிலைச் சொல்லியுள்ளனர். சிறுவர்களின் இந்தத் தகவலில் பெரும் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்கள் மகனைக் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
முன்னுக்குப் பின் முரணான பதிலால் சிக்கிய சிறுவர்கள்
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். முதற்கட்டமாக திவிஸுடன் மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களிடம் போலீசார் தனித்தனியாக விபரம் கேட்டனர். அப்போது அந்தச் சிறுவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறி போலீசாரை திசைதிருப்ப முயன்றனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே, தங்களின் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணையை முடுக்கிவிட்டனர்.
மது பாட்டில் மற்றும் கல்லால் அடித்துக் கொலை
போலீசாரின் அதிரடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. வாய்க்காலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறுவர்களுக்கு இடையே திடீரென ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் எல்லை மீறி முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற இரண்டு சிறுவர்கள், அங்குக் கிடந்த காலி மது பாட்டில்கள் மற்றும் கற்களைக் கொண்டு திவிஸின் தலையில் பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாணவன் திவிஸ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தான்.
ரகசியமாகக் குழி தோண்டி புதைப்பு
திவிஸ் உயிரிழந்ததைக் கண்டு பயந்துபோன அந்தச் சிறுவர்கள், கொலையை மறைத்து போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினர். யாரும் இல்லாத அந்தப் பகுதியிலேயே ரகசியமாகக் குழி தோண்டி, திவிஸின் உடலை உள்ளே தள்ளி மூடிப் புதைத்துள்ளனர். இந்த உண்மைகளைச் சிறுவர்கள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் சம்பவ இடத்திற்கு நேடியாக அழைத்துச் சென்றனர்.
சடலம் மீட்பும் கொலையாளிகள் கைதும்
கொலை நடந்த இடத்திற்குச் சென்ற போலீசார், அந்தச் சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தை தோண்டினர். அங்குப் புதைக்கப்பட்டிருந்த மாணவன் திவிஸின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து அவனது உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சக நண்பரையே அடித்துக் கொன்று புதைத்த குற்றத்திற்காக அவனது நண்பர்களான அந்த இரு சிறுவர்களையும் சிங்காநல்லூர் போலீசார் முறைப்படி கைது செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சிச் சம்பவம் கோயம்புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
