கோயம்புத்தூர் மாவட்டத்தில் 9 வயது சிறுமி காணாமல் போன நிலையில் குளக்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு ஏற்ப சிறுமிகள் முதல் முதிய பெண்மணிகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருப்பது ஆளும் அரசு மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுமி வெளியில் விளையாடுவது வழக்கம். அப்படியாக நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வீட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதன்பின் சிறுமி காணாமல் போனார். இதனால் பயந்துபோன பெற்றோர்களும், உறவினர்களும் அக்கம் பக்கத்தில் உள்ள பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் சிறுமி சென்றதாக சொல்லப்படும் கடைக்கு சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை இளைஞர் ஒருவர் பைக்கில் அழைத்து சென்றது தெரிய வந்தது. இந்த நிலையில் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அது காணாமல் போன சிறுமி என்பது தெரிய வந்தது.
இதனால் சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் தான் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.
இதனிடையே சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்களும் , அப்பகுதி மக்களும் சூலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விடிய விடிய போராட்டம் நடத்தினர். அதேசமயம் போலீசார் நடத்திய விசாரணையில் சூலூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர் மோகன் ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கார்த்தி காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் மோகன்ராஜை மே 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமியை கார்த்தி அழைத்துச் சென்றது தெரிய வந்ததாக போலீசார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அடிப்படையில் உண்மை என்ன என்பது தெரிய வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
