கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் கடந்த மே 22 ஆம் தேதி 10 வயது சிறுமி காணாமல் போனாள். அந்த சிறுமி அருகில் உள்ள கடைக்கு சென்ற நிலையில் காணாமல் போனாள். குடும்பத்தினர் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் சூலூர் போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதற்கிடையில் காணாமல் போன சிறுமி அருகில் உள்ள ஊரின் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டாள். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சிறுமியை கொலை செய்ததாக கார்த்தி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
பெண் வெளியிட்ட வீடியோ
இப்படியான சூழலில் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசும் வீடியோ வைரலானது. அதில் சிறுமி 22 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் காணாமல் போன நிலையில் அவளது தாய் அப்போது போதையில் இருந்ததாக தெரிவித்தார். மேலும் மறுநாள் காலையில் தான் தனது மகள் காணாமல் போனது அந்த பெண்ணுக்கு தெரியும். மே 22ம் தேதி மாலை 7 மணிக்கு சிறுமியின் அப்பா வீட்டுக்கு வந்த பிறகுதான் தேடிவிட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் அந்த குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான கார்த்திக்கும் அந்த சிறுமியின் தாய்க்கும் இடையே தொடர்பு இருந்தது, இது தொடர்பாக நன்கு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் முதலமைச்சர் விஜய் எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. சிறுமியைத் தேடுவதற்கு எத்தனை போலீசார் தண்ணீர் கூட அருந்தாமல் தங்கள் பணியை செய்தனர் என அந்த பெண் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. அது மட்டுமல்லாமல் சிறுமி தொடர்பான சம்பவங்களில் அவரது தாய்க்கு பதில் சித்தி தான் பெருமளவு மீடியா வரை அணுகியிருந்தார். இதனால் இணையவாசிகளும் சந்தேகம் தெரிவித்தனர்.
சிறுமியின் தாய் பதிலில் தடுமாற்றம்
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு சிறுமியின் தாய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில் இறந்து போன என் குழந்தையை பிரேத பரிசோதனை செய்த பிறகு என் கண்ணில் கூட காட்டாமல் பின் வாசல் வழியாக ஆம்புலன்ஸில் உடலை எடுத்துக் கொண்டு சென்று சொல்லாமல் கணவர் குடும்பத்தினர் எரித்து விட்டார்கள்.
ஒருவேளை எரிக்காமல் புதைத்து இருந்தால் இறப்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும் போது தோண்டி எடுத்துப் பார்த்திருக்க முடியும். ஆனால் இப்போது எரித்து விட்டார்கள் நான் அதிகாரிகள் மீது குற்றம் சொல்லவில்லை. என் கணவர் மற்றும் அவரின் அவருடன் இருந்தவர்கள் மீதுதான் சொல்கிறேன் என தெரிவித்திருந்தார்.
மகள் காணாமல் போனபோது நீங்கள் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “என்னுடைய கணவர் மது அருந்துவார். அவர் கருப்பு கலர் குளிர்பானம் ஒன்றில் மதுவை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு சென்றது எனக்கு தெரியாது. குழந்தை காணாமல் போன அன்று மதியம் 2 மணியளவில் தொண்டை வறண்டு போனதால் ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்து குடிக்கலாம் என திறந்த போது அங்கு குளிர்பானம் இருந்தது.
அதில் சிறிது தான் குடித்தேன். எனக்கு ஒரு மாதிரி இருந்ததால் குடிப்பதை நிறுத்திவிட்டு வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் எனக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. நான் தூங்கிவிட்டேன் அந்த சமயத்தில் தான் என்னுடைய மகள் கடைக்கு சென்று இருக்கிறாள். பின் இப்படியெல்லாம் ஆகும் என நினைக்கவில்லை. என் கணவர் ஏதற்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து வீட்டில் வைக்க வேண்டும். அதை குழந்தை எடுத்துக் கொடுத்து இருந்தால் என்ன ஆயிருக்கும்?” என கூறினார்.
அதுமட்டுமல்லாமல், எனக்கு மதுபழக்கம் இருக்கிறது என சொல்பவர்கள் ஆயிரம் சொல்லலாம். என் வீட்டில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியுமா?.. நாங்களே குழந்தைகளை இழந்து தவித்து வருகிறோம்.. என்னை குறை சொல்லியவரும் ஒரு பெண்தான். அவர் எதற்கு இப்படி எல்லாம் பேசுகிறார் என தெரியவில்லை. குழந்தையை கொலை செய்த கார்த்தி என்னுடைய பக்கத்து வீடுதான்.
நாங்கள் அந்த வீட்டுக்கு சென்ற பத்தாவது நாளில் அவர்கள் காலி செய்துவிட்டார்கள். கார்த்தி வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் என்னுடைய மகளும் அங்கு சென்று விளையாடுவாள். அப்போது என் மகள் சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பார்கள். குழந்தை காணாமல் போனவுடன் நாங்கள் தேடும் போது எங்களுடன் மோகன்ராஜ் இருந்தார். அவர் எங்களை திசை மாற்றி விடும் வேலையை செய்தார். ஆனால் கேமராவில் கார்த்தி அழைத்து சென்று தெரிந்தது. உடன் பிறகே போலீசார் மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்தனர்” என உயிரிழந்த சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
