சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று வியாழக்கிழமை (மே 21) தமிழக அமைச்சரவை விரிவாக்க விழா மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியின் கீழ் காங்கிரஸ் மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 23 புதிய முகங்கள் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஏற்கனவே முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் பதவியேற்ற அமைச்சர்களையும் சேர்த்து, தற்போது தமிழக அமைச்சரவையின் ஒட்டுமொத்த பலம் 33 ஆக உயர்ந்துள்ளது. புது முகங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைச்சரவையில், அனைத்து அமைச்சர்களுக்கும் இலாக்காக்கள் உடனுக்குடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சமூகநீதிக்கு முக்கியத்துவம்: 7 பட்டியல் இன அமைச்சர்கள்
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் சமூகநீதிக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறையும், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ கமலிக்கு கால்நடைத்துறையும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ காந்திராஜனுக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ மதன்ராஜுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில்துறையும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ தென்னரசுவுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையும், மேலூர் பொதுத் தொகுதி எம்.எல்.ஏ விசுவநாதனுக்கு உயர்கல்வித்துறையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன், ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ லோகேஷுக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வரலாற்றில் புதிய திருப்பம்: 4 பெண் அமைச்சர்கள்
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, தற்போதைய அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவத்திற்கு மிக உயரிய இடம் தரப்பட்டுள்ளது. கீர்த்தனா, கமலி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளனர்.
சென்னைக்கு சிம்மசொப்பனம்: மாவட்ட வாரியான பலம்
புதிய அமைச்சரவையில் தலைநகர் சென்னைக்கு அசுர பலம் கிடைத்துள்ளது. முதல்வர் விஜய் உள்பட வில்லிவாக்கம் தொகுதி ஆதவ் அர்ஜுனா, டி நகர் தொகுதி ஆனந்த், மயிலாப்பூர் தொகுதி வெங்கட்ரமணன், எழும்பூர் தொகுதி ராஜ்மோகன், ஆர் கே நகர் தொகுதி மரிய வில்சன், வேளச்சேரி தொகுதி குமார் என சென்னையைச் சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாகக் கோலோச்சுகின்றனர். மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, செங்கல்பட்டில் ஒரு அமைச்சரும், காஞ்சிபுரத்தில் இரு அமைச்சர்களும், ராணிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா ஒரு அமைச்சரும் பொறுப்பேற்றுள்ளனர்.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 3 அமைச்சர்களும், ஈரோடு மாவட்டத்தில் 2 அமைச்சர்களும், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு அமைச்சரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி, கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு அமைச்சரும், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்களும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரும் கிடைத்துள்ளனர். எதிர்காலத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
