"நீங்க பேசிக்கிட்டே இருங்க... நாங்க செஞ்சிக்கிட்டே இருப்போம்!" - திருச்சியில் முதல்வர் விஜய் பேச்சு!

திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுக-வை ஒரு குடும்பத்தின் 'அடிமைக் கூடாரம்' என விமர்சித்ததுடன், விமர்சிப்பவர்கள்தான் தனது எனர்ஜி ஃபோர்ஸ் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

M

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
"நீங்க பேசிக்கிட்டே இருங்க... நாங்க செஞ்சிக்கிட்டே இருப்போம்!" - திருச்சியில் முதல்வர் விஜய் பேச்சு!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக, அங்குள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய், "திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஸ்பெஷல் வணக்கம் மற்றும் நன்றிகள்" எனக் கூறி தனது அரசியல் அதிரடி உரையைத் தொடங்கினார்.

ஆறு நாட்கள் கூட அமைதியாக இல்லை

தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், "தமிழ்நாட்டிற்கு திருச்சி எப்படி ஒரு இதயமோ, அதேபோல்தான் எனது இதயத்திற்கு இந்த தொகுதி மக்களும் மிக நெருக்கமானவர்கள். நாம் ஆட்சிப் பொறுப்பேற்று சில வாரங்கள் கூட இன்னும் நிறைவடையவில்லை. 'ஆறு மாத காலம் புதிய அரசுக்கு அவகாசம் கொடுத்து அமைதியாக இருப்போம்' என்று மேடைகளில் முழங்கியவர்கள் எல்லாம், இப்போது ஆறு நாட்கள் கூட அமைதியைக் கடைப்பிடிக்கவில்லை. நாம் ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திலேயே தங்களின் புலம்பல்களை ஆரம்பித்து விட்டார்கள். பாவம், அவர்கள் இப்போது கல்யாண வீடுகளுக்கெல்லாம் சென்று, நான் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடப்பதைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்று எதிர்க்கட்சிகளைச் சாடினார்.

முதலமைச்சர் அல்ல... முதல் சேவகன்

இத்தனை வருடங்களாகத் தமிழக மாற்றி மாற்றி ஏமாற்றிக் கொண்டிருந்த இரு பெரும் சக்திகளையும் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிய மக்கள், உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த உங்களின் அண்ணனான, தம்பியான என்னை முதலமைச்சராகப் பார்க்காமல் முதல் சேவகனாக ஆக்கியுள்ளீர்கள் என்று விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதற்காக ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தலைவணங்கி தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறிய அவர், தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்த அத்தனை இயக்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் மீண்டும் தனது நன்றியைக் காணிக்கையாக்கினார்.

எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த மக்கள்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சந்தித்த முதல் தேர்தலில் கூட இந்த அளவுக்கு வாக்குச் சதவீதம் கிடைக்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவதாகக் குறிப்பிட்ட விஜய், "நான் என்னை எப்போதும் எம்.ஜி.ஆருடன் ஒப்பிடவில்லை, எம்.ஜி.ஆர் எப்போதும் தனித்துவமானவர்தான். ஆனால், நான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் நின்று மக்களுக்காக அன்போடு உழைக்க வந்த உங்களின் விஜய், அவ்வளவுதான். 1977-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கூட போடாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குகளை, இந்த 2026 தேர்தலில் நீங்கள் நமக்காகப் பதிவு செய்துள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எனினும், வருங்காலத்தில் வரப்போகும் அனைத்துத் தேர்தல்களிலும் உங்களின் முழுமையான ஆதரவை என்னால் பெற முடியும் என்ற ஆழமான நம்பிக்கை இப்போது எனது மனதில் பதிந்துள்ளது. இந்த ஆட்சியில் மக்கள் அனைத்து நன்மைகளையும் கண்கூடாகப் பார்க்கப் போகிறார்கள்" என்று நம்பிக்கையூட்டினார்.

விமர்சிப்பவர்கள்தான் என் எனர்ஜி ஃபோர்ஸ்

யார் எந்த உயர் பதவிக்குச் சென்றாலும் அவர்களைக் கிண்டலும் கேலியும் பேசுவது அரசியலில் வழக்கம் தான் என்று குறிப்பிட்ட முதல்வர் விஜய், "நம்மைப் பற்றி, நமது புதிய அரசியலைப் பற்றி, நமது மேடைப் பேச்சுகளைப் பற்றிப் பலரும் கிண்டல் செய்து கொண்டேதான் இருப்பார்கள். அவர்களுக்கு நான் வைக்கும் ஒரே ஒரு அன்பு வேண்டுகோள்... தயவுசெய்து உங்களின் கிண்டல்களை மட்டும் நிறுத்திவிடாதீர்கள். ஏனெனில், நீங்கள்தான் என்னுடைய 'எனர்ஜி ஃபோர்ஸ்' (Energy Force). நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள், நாங்கள் மக்களுக்கான வேலைகளைச் செய்துகொண்டே இருப்போம்" என்று சவால் விட்டார்.

அதிகாரம் உள்ளவர்கள் மட்டும்தான் கோட் சூட் போடணுமா?

தாம் சமீபகாலமாகப் புதிய பாணியில் கோட், சூட் அணிந்து வருவது குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் விஜய் மேடையில் பதிலடி தந்தார். "நாங்கள் எல்லாம் கோட், சூட் அணியக் கூடாதா? அதிகாரம் செய்பவர்களும் ஆதிக்கம் செலுத்துபவர்களும் மட்டும்தான் கோட், சூட் அணிய வேண்டுமா? எங்களைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு நிறங்கள்தான், அது 'பிளாக் அண்ட் வைட்' (Black and White). எல்லா இடங்களிலும் இந்த விஜய் கருப்பு வெள்ளையைப் போல நேர்மையாகவே இருப்பான். எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு நசநசவெனப் பேசும் ரகம் நான் கிடையாது. எல்லா கூட்டங்களிலும் 20 நிமிடங்களுக்குள் என் பேச்சை முடித்து விடுகிறேன். அதனால்தான் மக்கள், 'நீ எங்களுக்காக உழைக்க வந்தவன், அந்த வேலையை மட்டும் பார், உனக்காக நாங்கள் பேசுகிறோம்' என்று எனக்குப் பேராதரவு தருகிறார்கள்" என்றார்.

நேரடிப் போட்டி திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான்

தமிழக அரசியலைப் பொறுத்தவரை இப்போதும் எப்போதும் இரண்டே இரண்டு பேருக்குக் குள்ள்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது என்று விஜய் திட்டவட்டமாகக் கூறினார். "ஒன்று திமுக, இன்னொன்று தமிழக வெற்றிக் கழகம். இந்த இரண்டுக்கும் நடுவில் வேறு எந்தக் கட்சிக்கும் இங்கு எந்த வேலையும் கிடையாது. தேர்தலுக்கு முன்னாடியும் அவர்களுக்கு வேலையில்லை, தேர்தலுக்குப் பிறகோ சுத்தமாக இல்லை. ஆனால், இந்த திமுகவும் பலரும் சேர்ந்து கடந்த காலங்களில் ஒரு பெரிய நாடகக் கூத்து நடத்தினார்கள். அதைப் பார்த்தபோது இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ற எண்ணம் தோன்றியது. வருங்காலத்தில் உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த விஜயா, இல்லை அதனைத் தொடர்ந்து எதிர்க்கப் போகும் ஸ்டாலின் சாரா என்பதை மக்கள் தங்களின் தீர்ப்பின் மூலம் முடிவு செய்வார்கள். நம்மளை ஏளனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். திமுக நம்மை அவமானப்படுத்த நினைப்பதும், ஏளனம் பேசுவதும் ஒருவகையில் நமக்கு நன்மையாகவே முடிகிறது" என்று விவரித்தார்.

மக்களை தற்குறிகள் என்பதா?

நம் புதிய ஆட்சி வந்த பிறகு சட்டமன்றத்தில் யார் என்ன பேசினாலும் நமக்கு என்ன என்ற பொதுமக்களின் சலிப்பு நிலை மாறி, இப்போது எல்லோரும் சட்டசபை நிகழ்வுகளை உற்று கவனிக்கும் ஆரோக்கியமான சூழல் உருவாகியிருப்பதாக விஜய் மகிழ்ச்சி தெரிவித்தார். குறிப்பாக, இளம் தலைமுறையினரும் பெண்களும் அரசியலில் பெரும் விழிப்புணர்வுடன் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "இப்படிப்பட்ட விழிப்புணர்வு மிக்க நமது மக்களை இன்னும் சிலர் 'தற்குறிகள்' என்று மேடைகளில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் யாரைத் தற்குறி என்று ஏளனம் செய்தீர்களோ, அவர்கள்தான் இன்று உங்களின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக மாற்றி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஓட்டுப் போட்டால் மட்டும் அவர்கள் நல்லவர்கள் என்றும், நமக்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்தால் அவர்கள் அரசியல் புரிதல் இல்லாமல் கவர்ச்சியில் மயங்கி வாக்களித்த தற்குறிகள் என்றும் வசைபாடுகிறார்கள்" என்று கொதித்தெழுந்தார்.

திமுக ஒரு அடிமைக் கூடாரம்

பேச்சின் நிறைவாக திமுக-வின் உட்கட்சி விவகாரங்களை அதிரடியாகத் தொட்டுப் பேசினார் விஜய். "பேரறிஞர் அண்ணா அவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்து ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்று ஒரு குடும்பத்தின் 'அடிமைக் கூடாரமாக' மாற்றியது யார்? உங்களது கட்சியின் உண்மையான உடன்பிறப்புகள் மற்றும் தொண்டர்கள் கூட இன்று வெளிப்படையாகச் சொல்வது என்னவென்றால், 'திமுக இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இப்படி சீரழிந்து போனதற்கு என்ன காரணம் என்பதைப் போய் உங்கள் குடும்பத்தினரிடமே கேளுங்கள்' என்பதுதான். ஒவ்வொரு உண்மையான திமுக தொண்டனும் இதைத்தான் முணுமுணுக்கிறான். அதைத் தலைவர்கள் புரிந்து கொள்ளாமல் வாக்களித்த மக்களைத் தவறாகப் பேசுகிறார்கள். மக்களைத் தவறாகப் பேசினால் இந்த விஜய் சும்மா இருக்க மாட்டான், தட்டிக்கேட்பான். இந்த விஜய்யும் தமிழ்நாட்டு மக்களும் வேறு வேறு அல்ல. நமக்கும் மக்களுக்குமிடையே இருக்கும் அந்தப் பாசப் பந்தத்தை யாராலும் தடுக்க முடியாது. என்னென்ன சூழ்ச்சிகள், சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், நம்மையும் மக்களையும் பிரிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது" என்று முதல்வர் விஜய் மிக ஆக்ரோஷமாகத் தனது உரையை நிறைவு செய்தார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...