தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்பு விழா முதல் தலைமைச் செயலகப் பணிகள் வரை அவர் தொடர்ந்து கருப்பு நிற கோட்-சூட் அணிந்து வருவதால், தற்போது தமிழகம் முழுவதும் அந்த ஆடை பாணி ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே 'கில்லி', 'துப்பாக்கி', 'லியோ' போன்ற திரைப்படங்களில் அவர் அணிந்த ஆடைகள் ரசிகர்களிடம் டிரெண்டான நிலையில், இப்போது முதலமைச்சர் விஜய் பயன்படுத்தும் 'அபிஷியல் லுக்' ஜவுளிச் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
அரசியல் ஆடையிலிருந்து அதிகாரப்பூர்வ அடையாளம் வரை
கட்சி மாநாடுகள் மற்றும் தேர்தல் பரப்புரையின் போது விஜய் அணிந்து வந்த வெள்ளை நிறச் சட்டை மற்றும் சந்தன நிறப் பேண்ட், தமிழக இளைஞர்களிடையே ஒரு 'டிரஸ் கோடு' போலவே மாறிப்போனது. வாக்களிக்கும் நாளில் கூட பல இளைஞர்கள் அந்த உடையிலேயே வந்து வாக்களித்ததை காண முடிந்தது. ஆனால், தற்போது அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கருப்பு வெள்ளை நிறக் கோட்-சூட் அணிந்து வருவது, ஒரு புதிய அதிகாரப்பூர்வ அடையாளமாக மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனைத் தளங்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டன.
சந்தையில் களைகட்டும் 'சிஎம் விஜய்' காம்போ
ஜவுளிக் கடைகளில் தற்போது 'சிஎம் விஜய் லுக்' மற்றும் 'தளபதி அபிஷியல் ஸ்டைல்' என்ற பெயர்களில் கோட்-சூட் தொகுப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. கருப்பு நிறப் பேண்ட், வெள்ளைச் சட்டை, கருப்பு நிறக் கோட் மற்றும் கருப்பு காலணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த முழுமையான காம்போ 4,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரசியல் தலைவர்களின் உடைகள் பெரும்பாலும் வேட்டி-சட்டையாகவே இருந்த தமிழகத்தில், முதலமைச்சர் விஜய்யின் இந்த கோட்-சூட் ஸ்டைல் இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.
