கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா வளைவைத் திறந்து வைத்த கையோடு, ரூ.28.20 கோடியில் பழையாறு குடிநீர் திட்டம், ஏ.வி.எம் (AVM) கால்வாய் புனரமைப்பு, சாலை விரிவாக்கம் மற்றும் மீனவர் நலனுக்கான சிறப்பு உதவித்தொகை உள்ளிட்ட வாழ்வாதாரத் திட்டங்களை அவர் அறிவித்தார். குறிப்பாக, கடலில் காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்குக் காப்பீடு கிடைக்கும் வரை மாதம் ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு மீனவ மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்களுக்காக சக்தியை மீறி உழைக்கிறேன்
விழாவில் பேசிய முதல்வர், "மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற எனது சக்தியை மீறி உழைத்து வருகிறேன். வாக்களித்தவர்கள் மட்டுமல்லாது, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் இந்த அரசு உழைக்கிறது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தனது 50 ஆண்டுகால அரசியல் உழைப்பை நினைவுகூர்ந்த அவர், தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரையும் தான் அறிந்திருப்பதால்தான் மக்களுக்கானத் தேவைகளை உணர்ந்து திட்டங்களைத் தீட்டுவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பாஜக மற்றும் அதிமுக மீது கடும் விமர்சனம்
அரசியல் கள நிலவரம் குறித்துப் பேசிய முதலமைச்சர், பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடினார். "பாஜக என்ற டப்பா என்ஜினையும், அதிமுக என்ற மூழ்கும் கப்பலையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் இணைந்தால் பூஜ்ஜியமே மிஞ்சும், ராஜ்ஜியம் கிடைக்காது" என்று அவர் எள்ளி நகையாடினார். மேலும், தேர்தல் நெருங்குவதால் பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவார் என்றும், அவர் எத்தனை முறை வந்தாலும் என்.டி.ஏ கூட்டணிக்குத் தோல்வியே பரிசாகும் என்றும் முதல்வர் விமர்சித்தார். "தமிழ்நாடு டெல்லியில் இருந்து ஆளப்படக் கூடாது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்துதான் ஆளப்பட வேண்டும்" என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
