மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் நாமக்கல்லில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்குத் தங்களது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் திமுகவினர் தங்கள் வீடுகளின் முன் கருப்புக்கொடி கட்டியும், கோலமிட்டும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். தேர்தல் பரப்புரைக்காகச் சேலத்திலிருந்து நேற்று இரவு நாமக்கல் வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலை நாமக்கல் நல்லிபாளையம் பகுதிக்குக் கருப்பு உடை அணிந்து வந்த அவர், அங்கிருந்த ஒரு வீட்டின் முன்புள்ள கொடிக்கம்பத்தில் கருப்புக்கொடியை ஏற்றிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்துத் தனது எதிர்ப்பை ஆக்ரோஷமாகப் பதிவு செய்தார்.
இந்த நிகழ்வின் போது "தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து நாமக்கல் உழவர் சந்தைப் பகுதிக்குச் சென்ற முதலமைச்சர், அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் ராணிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தப் போராட்டக் களத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பாசிச பாஜகவின் ஆணவத்தை வீழ்த்தத் தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் டெல்லி வரை எதிரொலித்ததை நினைவுகூர்ந்த அவர், தமிழர்களைத் தாய்நாட்டிலேயே அகதிகளாக்கும் இந்தக் கருப்புச் சட்டத்திற்கு எதிரான தீ திராவிட நாடெங்கும் பரவும் என்றும், இது பாஜகவின் அதிகார மமதையை அடக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்" என்ற வரிகளுடன் பாஜக அரசின் நடவடிக்கைகளை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
