தமிழக சட்டசபை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பேசியுள்ளார். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே தனது இலக்கு என்று குறிப்பிட்ட அவர், கலைஞர் கருணாநிதியை விட தான் 'மோர் டேஞ்சர்' என விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும், மாநிலத்தை வஞ்சிக்கப் பார்ப்பவர்களுக்கும் தான் என்றுமே ஆபத்தானவன் தான் எனத் தெரிவித்தார்.
மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி
திமுக இந்துக்களுக்கு எதிரானது என்ற பாஜகவின் பொய் பிரச்சாரத்தை மறுத்த முதல்வர், சிறுபான்மையினருக்காக முதலில் குரல் கொடுக்கும் கட்சி திமுக தான் என்றும், தமிழக மண்ணில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 7,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை மீட்டது மற்றும் ஆயிரக்கணக்கான கோவில்களுக்குக் குடமுழுக்கு நடத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆன்மீகப் பணிகளிலும் திராவிட மாடல் அரசு சிறந்து விளங்குவதை உறுதிப்படுத்தினார்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் தம்மால் நாட்கணக்கில் பேச முடியும் என்று குறிப்பிட்ட அவர், மற்ற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் முன்னிலையில் இருப்பதாகப் பெருமிதம் கொண்டார். ஒரு சில குறைகள் இருந்தாலும் அவை ஏற்கனவே சரிசெய்யப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்ட முதல்வர், தமிழகத்தின் வளர்ச்சி அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொய்வின்றித் தொடர திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த இறுதி கட்டப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
