தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் போது சக பயணிகளுடன் உரையாடி மகிழ்ந்த அவர், மெட்ரோ ரயில் திட்டம் உருவான ஆரம்பகால நினைவுகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தான் துணை முதலமைச்சராக இருந்த காலத்திலேயே ஜப்பான் நாட்டிற்குச் சென்று நிதி பெற்று வந்து, இத்திட்டத்தை முன்னின்று தொடங்கி வைத்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
தற்போது முதற்கட்ட மெட்ரோ சேவையை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளான மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி உள்ளிட்ட வழித்தடப் பணிகளை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க உள்ளதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். மேலும், கிளாம்பாக்கம் மற்றும் சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு புதிய விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக மிக நீண்ட தூரத்தை இணைக்கும் முக்கிய நகரமாகச் சென்னை உருவெடுக்கும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் இந்தத் திட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
