அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஒருங்கிணைந்து ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உயரிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தச் செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முறைப்படி உறுதிப்படுத்தியுள்ளார். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, 'ஆப்பரேஷன் பிராமிஸ் 4' என்ற புதிய போர் முழக்கத்துடன் ஈரான் தனது பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவத் தளங்களைக் குறிவைத்து கத்தார், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட அண்டை வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகளை மாரிப்போல வீசி வருவதால் ஒட்டுமொத்தப் பிராந்தியமும் போர்க்களமாக மாறியுள்ளது.
வளைகுடா தமிழர்களின் பாதுகாப்பு
இந்தத் திடீர் போர்ச் சூழலால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் பதற்றமான நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் (X) பக்கத்தில் தமிழர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் வழங்கும் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், தற்போதைய சூழலில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிட்டு வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் சூழலைத் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் டெல்லி கட்டுப்பாட்டு அறை
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர உதவி எண்களைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வெளியிட்டுள்ளது. அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் இதற்கெனத் தனியாகக் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் மற்றும் அவசரத் தகவல்களுக்காகத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
புது டெல்லி கட்டுப்பாட்டு அறை:
தொலைபேசி: 011-24193300
வாட்ஸ்அப் எண்: 92895 16712
அயலகத் தமிழர் நலத்துறை எண்கள்:
இந்தியாவிற்குள் தொடர்புகொள்ள: 1800 309 3793 (கட்டணமில்லா எண்)
வெளிநாட்டிலிருந்து மிஸ்டு கால் கொடுக்க: +91 80 6900 9900
நேரடித் தொடர்புக்கு: +91 80 6900 9901
