திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவிக்க உள்ள நிலையில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் மக்களை சந்திக்கும் விஜய்
இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான பதிவில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ளும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெறவுள்ளது.
எனவே காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கல்
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்,சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும். QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத தவெகவினரும், பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் பற்றி விஜய் பேசுவாரா?
தவெக தலைவரும்,முதலமைச்சருமான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் விதிகளின்படி அவர் திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். இதனால் அடுத்த 6 மாத காலங்களில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைப் பற்றி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
