தமிழகம் முழுவதும் தெரு நாய்களின் பெருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரப் பகுதிகளில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் களைய சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கடந்த 2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான கணக்கெடுப்பில், சென்னையில் மட்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
தடுப்பூசி மற்றும் நவீன கண்காணிப்பு நடவடிக்கைகள்
இந்தக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தெரு நாய்கள் மூலம் பரவும் ரேபீஸ் நோயைக் கட்டுப்படுத்த தீவிர தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, 16,611 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அவற்றைக் கண்காணிக்கும் வகையில் கழுத்தில் 'மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டு நவீன முறையில் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
தெரு நாய்கள் மட்டுமின்றி, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதன் மூலமும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால், வளர்ப்பு நாய்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
வளர்ப்பு நாய்கள் குறித்த மாநகராட்சியின் ஆய்வு
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் சென்னையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வளர்ப்பு நாய்கள் இருப்பது தெரியவந்தது. இந்த நாய்களுக்கு உரிமையாளர்கள் முறையாக உரிமம் (License) பெற வேண்டும் என்றும், ரேபீஸ் தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி சுமார் 74 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே முறையான உரிமம் பெறப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பெரும்பலான வளர்ப்பு நாய்கள் எவ்வித அரசு அனுமதியுமின்றி வளர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
களத்தில் இறங்கும் அதிகாரிகள் மற்றும் அபராத எச்சரிக்கை
இந்நிலையில், உரிமம் பெறாமல் நாய் வளர்ப்பவர்களைக் கண்டறிய சென்னை மாநகராட்சி தற்போது அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநகராட்சி ஊழியர்கள் இனி நேரடியாக வீடுகளுக்கே சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் போது வளர்ப்பு நாய்களுக்கு உரிய உரிமம் பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாய் வளர்ப்போர் உடனடியாக தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்துவதுடன், மாநகராட்சியிடம் உரிய உரிமத்தைப் பெற்று அபராத நடவடிக்கையிலிருந்து தவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
