சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. போட்டி நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் ரசிகர்கள், மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்துகள் தவிர) கட்டணமின்றி பயணிக்கலாம்.
இந்தச் சலுகையானது போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக இருந்தும், போட்டி முடிந்த பிறகு மூன்று மணி நேரம் வரையிலும் செல்லுபடியாகும். பயணத்தின் போது நடத்துனரிடம் போட்டி டிக்கெட்டைக் காண்பித்து ரசிகர்கள் தடையின்றி பயணிக்க முடியும். ரசிகர்களின் வசதிக்காகச் சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளையும் இயக்க மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், போட்டிகள் நிறைவடைந்த பிறகு ரசிகர்கள் தங்களின் இருப்பிடங்களுக்குத் திரும்ப ஏதுவாக அண்ணா சதுக்கம், தீவுத்திடல், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா சாலை ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
