தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலவி வந்த கூட்டணி குழப்பங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, தேமுதிக முதல்முறையாக திமுகவுடன் கைகோர்த்துள்ளது. விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு கட்சி எடுக்கும் இந்த முக்கிய முடிவு, தேமுதிக தொண்டர்களிடையே பெரும் எழுச்சியையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் பலமான கூட்டணியில் இணைந்திருப்பது கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
நழுவிய வாய்ப்பு: கலக்கத்தில் அதிமுக கூட்டணி
தேமுதிகவை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று அதிமுக மற்றும் பாஜக தீவிரமாக களம் இறங்கின. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் முக்கியப் புள்ளியான எஸ்.பி. வேலுமணி, தேமுதிக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. தேமுதிக மீண்டும் அதிமுக கூட்டணிக்குத்தான் செல்லும் என பலரும் கணித்திருந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் இந்த திடீர் முடிவு அதிமுக மற்றும் பாஜக தலைமைகளுக்குப் பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பாஜகவின் காட்டமான விமர்சனம்
இந்தக் கூட்டணி முடிவை தமிழக பாஜக கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்துப் பதிவிட்டுள்ள பாஜக, மறைந்த கேப்டன் விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் திமுக எனும் 'தீய சக்தியை' எதிர்த்தே அரசியல் செய்தவர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. விஜயகாந்திற்கும் அவரது கட்சிக்கும் திமுக பல்வேறு அவமானங்களையும், இன்னல்களையும் கொடுத்த நிலையில், இன்று அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதை "கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது" என பாஜக மிகவும் காரசாரமாக விமர்சித்துள்ளது.
