AIADMK | வார்த்தையை விடும் அதிமுக.. முதல்வரை தரக்குறைவாக விமர்சனம்.. கலங்கும் தொண்டர்கள்!

அதிமுகவை பிளவுபடுத்தியதில் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் உள்ளார். முதலில் உட்கட்சி பிரச்சனையை சரி செய்துவிட்டு பின்பு விஜயை பார்த்துக் கொள்ளலாம் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டு வருகிறார்.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
AIADMK | வார்த்தையை விடும் அதிமுக.. முதல்வரை தரக்குறைவாக விமர்சனம்.. கலங்கும் தொண்டர்கள்!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சிக்கும் அதிமுக தனது பதிவுகளில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வருவது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலுக்குப் பின் மாறிய காட்சிகள்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதன்படி தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த ஐந்து கட்சிகள் அப்படியே தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் திரும்பியது. அதேசமயம் இதுவரை நடைமுறையில் இல்லாத கூட்டணி ஆட்சி என்பதை தமிழ்நாட்டில் விஜய் சாத்தியமாக்கி உள்ளார்.

அதேபோல் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு உட்கட்சி பிரச்சினை வெடித்துள்ளது. மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட நான்கு எம்எல்ஏக்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் கட்சியில் இணைந்து விட்டனர்.

எடப்பாடி பழனிசாமியின் கோபம்

அதிமுகவை பிளவுபடுத்தியதில் விஜய் தந்திரமாக செயல்பட்டதால் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் உள்ளார். முதலில் உட்கட்சி பிரச்சனையை சரி செய்துவிட்டு பின்பு விஜயை பார்த்துக் கொள்ளலாம் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் ஆட்சி அதிகாரத்தை இழந்ததால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஐடி விங் முன்பைவிட படு வேகமாக செயல்பட்டு வருகிறது.

அதேசமயம் விஜய்யையும், தமிழக வெற்றிக் கழக அரசையும் விமர்சிக்கும் போது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது அனைத்து தரப்பு மக்களையும் எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற வரைமுறை இல்லாமல், குறைந்தபட்சம் அந்த பதவிக்கு மரியாதை கொடுக்காமல் சகட்டுமேனிக்கு வார்த்தைகளை விடுவதால் திமுக மற்றும் அதிமுக மீது மக்கள் அதிருப்தி முன்பை விட அதிகமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

நம்ம மதிப்பை கெடுத்துக்கொள்ள வேண்டாம்

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என வீர வசனம் பேசிவிட்டு சமூக வலைதளங்களில் அவர்களை தரக்குறைவாக பேசுவது என்ன நியாயம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசையும், முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்திருந்த தமிழக வெற்றிக் கழக ஐடி விங், தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்தது.

இதற்கு மீண்டும் பதில் அளித்த அதிமுக ஐடி விங் மெர்சல் மற்றும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு ஊர்ந்து வந்த தலைவர் என விஜயை குறிப்பிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே விஜய் அதிமுக பெயரை கூட தனது தேர்தல் பரப்புரை தொடங்கி எங்கேயும் சொல்ல மறுக்கும் நிலையில், அவருக்கு பதில் அளிக்கிறேன் என தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி நம்முடைய மதிப்பை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம் என அதிமுக தொண்டர்கள் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...