திருச்சியில் நடைபெற்ற பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜயின் திமுக பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தவெக vs திமுக
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் நேற்று திருச்சியில் நடைபெற்ற தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 20 நாட்களை கடந்துள்ள நிலையில் தனது ஆட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து விஜய் பதிலளித்தார்.
அதே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவை சரமாரியாக சாடினார். இந்த சூழலில் விஜய் பேசும்போது திமுகவின் சில விஷயங்களை சுட்டிக்காட்டி பேசினார். அதாவது ஜென்ஸி எனப்படும் இளம் தலைமுறையினர் சந்திப்பு தொடங்கி சமூக வலைதளங்களில் திமுகவினரின் செயல்பாடு வரை பட்டும் படாமல் பேசினார்.
தொடர்ந்து தவறு செய்யும் திமுக
பொதுவாக ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு மாதிரியான தனித்துவம் உண்டு. ஆனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியலில் களமிறங்கிய பிறகு அந்த தனித்துவமானது காணாமல் போய் வருகிறது. குறிப்பாக புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை போல விஜய் செய்வதை பார்த்து திமுகவும் அப்படியே காப்பி செய்வதாக பலரும் விமர்சித்தனர்.
விஜயும் யாரையோ ஒருவரை பார்த்து அரசியல் களத்தில் ஸ்டைலாக நடந்து கொண்டாலும், அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் காலம் காலமாக வெவ்வேறு பரிணாமங்களில் பார்த்து வளர்ந்த ஒரு கட்சி தனது ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடைபோடுவதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
திமுக தேர்தல் களத்தில் மாஸ் காட்ட விரும்பி பல இடங்களில் சறுக்கியதற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் காரைக்குடியில் விஜய் தேர்தல் பரப்புரையின் போது சைக்கிள் ஓட்டினால், சென்னை தி.நகரில் திமுக வேட்பாளர் தனது படைகளுடன் சைக்கிள் ஒட்டி சென்றது ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. ஆனால் அதிமுக அப்படிப்பட்ட எத்தகைய விபரீத காரியங்களிலும் ஈடுபடவில்லை.
இப்போது கூட ஜென்ஸி எனப்படும் இளம் தலைமுறையினர் சந்திப்பு கூட்டத்தை திமுக நடத்தியது. அதேசமயம் அதிமுக இது போன்ற எந்த விஷயங்களையும் மேற்கொள்ளாமல் உட்கட்சி பிரச்சனை ஒருபுறம் சென்று கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் சமூக வலைதளங்களில் ஐடி விங் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திமுக ஐடி விங்கும் இப்போதும் 24 மணி நேரம் கண்கொத்தி பாம்பாக தவெகவை சீண்டுவதை வழக்கமாக்கி உள்ளது.
இனியாவது நிலைமை மாறுமா?
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கலவையான வார்த்தைகளில் பதிவுகள் வெளியிடப்படுவது வழக்கம். இதனை தேர்தலுக்குப் பின் அப்படியே திமுக மற்றும் அதிமுக பின்பற்றி வருவது அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இப்படி நமக்கான தனித்துவத்தை இழந்து மற்றவர்களை பார்த்து அவர்கள் பின்னோக்கி சென்றால் நமக்கு இழப்புதான் ஏற்படும் என பலரும் சமூக வலைதளங்கள் மூலம் விமர்சித்து வருகின்றனர்.
இதை விஜயும் குறிப்பிட்டு பேசியுள்ள நிலையில் இனியாவது தங்களது ஸ்டைலுக்கு ஏற்றவாறு திமுக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. களத்தில் நினைத்தபடி மாஸ் காட்டத்தான் முடியவில்லை, முடிந்தவரை ட்ரோல் மெட்டீரியலாக மாறாமல் இருந்தால் போதும் என திமுக தொண்டர்கள் குமுறி வருகின்றனர். காலத்திற்கு ஏற்றவாறு மாற வேண்டியது அவசியம் தான். ஆனால் காலம் நமக்குத் தந்த அடையாளத்தை மாற்ற நினைப்பது நம்மையே கேலிப் பொருளாக மாற்றி விடும் என்பதை உணர வேண்டும் என திமுகவுக்கு அரசியல் நிபுணர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.
