தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரமான வியூகங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாக விஜய்யிடம் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே தனது கட்சி மாநாட்டில் "ஆட்சியில் பங்கு" என அறிவித்திருந்த விஜய், சமீபத்தில் தனித்துப் போட்டி என அறிவித்திருந்தார். இருப்பினும், திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் தவெக ஆகிய இரு துருவங்களையும் ஒரே கூட்டணியில் இணைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இந்த மெகா கூட்டணி அமைந்தால் 100% வெற்றி உறுதி என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நெருக்கடி கொடுக்கும் வழக்குகளும் தணிக்கைச் சிக்கலும்
மறுபுறம், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை மற்றும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் போன்றவை விஜய்க்கு அரசியல் ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்த பாஜக கையாளும் உத்திகளாகப் பார்க்கப்படுகின்றன. தணிக்கை அதிகாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வழக்கு தள்ளிப்போனது முதல், சிபிஐ சம்மன் வரை அனைத்தும் விஜய்யை கூட்டணிக்குச் சம்மதிக்க வைப்பதற்கான காய் நகர்த்தல்களே என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், தனது கொள்கை எதிரியாக பாஜகவை அறிவித்துள்ள விஜய், இந்த அழுத்தங்களுக்குப் பணிவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவின் விளக்கம்
இந்தக் கூட்டணி விவகாரம் குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யின் கரூர் வழக்கு மற்றும் திரைப்படத் தணிக்கைச் சிக்கல்களுக்கும் பாஜகவிற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் இன்னும் இழுபறி நீடிக்கும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக-வின் நிலைப்பாட்டை உறுதி செய்த பிறகே அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க அதிமுக தலைமையிலான கூட்டணி காத்திருப்பதாகத் தெரிகிறது. இன்று நடைபெறவுள்ள தவெக நேர்காணலில் விஜய்க்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் அரசியல் தளத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
