தன்னை போன்றோரை முன்னிறுத்தினால் தோல்வி தொடரும் என பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்த கருத்துக்கு பிக்பாஸ் ஜூலி பதிலடி கொடுத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இதனால் மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் பணியை மேலிட தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஜென் ஸி எனப்படும் இளம் தலைமுறையினரின் சந்திப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரும் கலந்துக் கொண்டனர். முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிக்பாஸ் ஜூலி, நடிகை ரேகா நாயார் போன்றோரும் பங்கேற்றனர்.
ஜூலி போன்றோரால் திமுக தோற்கும்
இதனிடையே இந்நிகழ்ச்சி பற்றி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், “அறிவார்ந்த இளம் சமூகத்தை கட்டமைப்பதே திமுகவின் Gen Z எனும் புதிய அரசியல் களம் வெல்ல உதவும். இதுபோன்றோரை முன்னிறுத்தினால் தோல்வி தொடரும். நிச்சயம் தொடரும். அடுத்து யார் உங்கள் Gen Z brand Ambassador? வாட்டர் மெலன் திவாகரா?” என தனக்குரிய பாணியில் கலாய்த்திருந்தார்.
என்னை வைத்து அரசியல் கணக்கா?
இதனால் கடுப்பான ஜூலி, “ஒரு பொது நிகழ்ச்சிக்குச் சென்று, அங்கிருக்கும் நூற்றுக்கணக்கானோரில் ஒருத்தியாக ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது கூட சிலரது கண்ணை இந்த அளவுக்கு உறுத்துகிறது என்றால், அது என் தப்பு இல்லை; பார்ப்பவர்களின் பார்வையில் இருக்கும் குறைபாடு.நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தில் ஒருத்தியாக நின்ற எனக்கே இந்த விளம்பரம் என்றால், என்னை வைத்து அரசியல் கணக்கு போடுபவர்களின் கற்பனைத் திறனை என்னவென்று சொல்வது? என் வருகையால் ஒரு பேரியக்கத்தின் வெற்றியோ, தோல்வியோ தீர்மானிக்கப்படுகிறது என்று நீங்கள் நம்பினால்... நன்றி! என்னை அந்த அளவுக்குப் பெரிய ஆளாக நினைத்ததற்கு.
அடுத்தவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டு, வன்மத்தைக் கக்குவதை விட்டுவிட்டு, உருப்படியாக எதிலாவது கவனம் செலுத்தினால் உங்களுக்கும் நல்லது, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. வாழ்க வளமுடன்!” என பதிலடி கொடுத்துள்ளார்.
