விஜயின் தலைமையை ஏற்க எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் தவெகவில் இணைவேன் என்பதையும் சூசகமாக கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல் களம் வேறு மாதிரி மாறியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இரு கம்யூனிஸ்ட்கள் என 5 கட்சிகள் ஆளும் தவெக அரசுக்கு ஆதரவாக வந்துள்ளது. இதில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி புரட்சி அண்ணா திமுக என்ற கட்சியை பெங்களூரு புகழேந்தி தொடங்கினார்.
எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்
அவர் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புகழேந்தி பேசுகையில், எடப்பாடி பழனிசாமி இதுவரை தான் திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கவில்லை என தெரிவித்துள்ளாரா என்று கேள்வி எழுப்பினார். இப்போது கூட அந்த எண்ணத்தில் தொடர்ந்து அதற்கான வேலையில் அவர் ஈடுபட்டுக் கொண்டுள்ளார். பாண்டிச்சேரி ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்களை அழைத்து சென்றது முதல் இன்றைய தேதி வரை அவரது நடவடிக்கைகள் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என நினைக்கிறார்.
அதே சமயம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நான் நம்பிக்கைக்குரிய ஒருவராக பார்க்கிறேன். அவர் இதே தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுகவில் எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான முயற்சி எடுக்கப்படும் என கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நின்றார். ஆனால் தற்போது அவருடன் இணைந்து கொண்டு எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என சொல்கிறார். அப்படி என்றால் எஸ்.பி.வேலுமணி நடத்தியது நாடகம் தான் என நிரூபணமாகிறது. ஆகவே எஸ்.பி.வேலுமணி போன்றோர் தங்களுடைய பதவி சுகத்துக்காக இத்தகைய நாடகங்களில் ஈடுபடுகின்றனர். தன்னுடைய முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பெறப்போவதில்லை.
தவெகவில் இணையும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்
அதேசமயம் அதிமுகவிலிருந்து பல எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் தலைமையை ஏற்றுக் கொண்டு சேர இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. விரைவிலேயே அதனை நாம் பார்க்கப் போகிறோம். தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கலைக்க நினைத்தால் அது ஜனநாயக விரோதமாக மாறிவிடும். அதனால் ஆறு மாதம் வரை எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் இருங்கள். தினம் ஒரு பிரச்சினையை கிளப்பி எதற்கெடுத்தாலும் தவெக தான் காரணம் எனக் கூறுகிறார்கள்.
அது மாற வேண்டும். நானும், இசக்கி சுப்பையாவும் அமைச்சர் ஆனந்தை தொகுதி விஷயமாக சந்தித்தோம். தவெகவில் அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
மேலும் 10 பைசா கூட பணம் கொடுக்காமல் இந்திய வரலாற்றில் நீண்ட வருடங்களுக்கு பின்னால் தேர்தலில் ஜெயித்த பெருமை முதலமைச்சர் ஜோசப் விஜயை தான் சாரும். அதை மாற்றவும் முடியாது, மறைக்கவும் முடியாது. இளைஞர்கள் பட்டாளம் அவர் பின்னால் உள்ளது. மேலும் விஜயின் தலைமையை ஏற்க எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. நேரம் வரும்போது அதை பற்றி தெரிவிக்கிறேன் என புகழேந்தி கூறியுள்ளார்.
