மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் இஸ்ரேலியர்கள் அதிகளவில் வருகை தரும் வட்டக்கானல் பகுதியில், தற்போது 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் முகாமிட்டுள்ளனர். இவர்களின் பாதுகாப்பு மற்றும் வழிபாட்டு இடங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருக்க, தமிழக காவல்துறையினர் மற்றும் நக்சல் தடுப்புப் பிரிவு படையினர் நவீன ரக துப்பாக்கிகளுடன் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் நிலவும் போர் சூழல் உள்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. வட்டக்கானல் கிராமம் முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், போர் சூழல் தணிந்து நிலைமை சீராகும் வரை இந்த அதிரடி பாதுகாப்புப் பணிகள் தொடரும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
