தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவிற்கு, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை குறித்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டால் பழைய திமுகவாக மாறிப் போராடுவோம் என முதல்வர் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள அண்ணாமலை, நாட்டின் பிரதமரையே மிரட்டும் தொனியில் முதல்வர் பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார். 60-களுக்குத் திரும்பி விடுவோம் என்று முதல்வர் கூறுவது மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், பெண்களுக்குப் பிரதிநிதித்துவமும் மரியாதையும் வழங்கவே பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், கடந்த 2023-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அந்தச் சட்டத்தை விரைவாக அமல்படுத்துவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுவதாகவும், இது மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை அதிகரிக்கும் முயற்சி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். வரும் 16-ஆம் தேதி மசோதாவை முழுமையாகப் பார்க்கும் முன்பே, மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பயத்தையும் உருவாக்குவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள அவர், முதல்வரின் இந்தச் செயல் அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
