சென்னை அமைந்தகரையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா வளைவின் முன்னே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி ஏற்றப்பட்டிருப்பது இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரறிஞர் அண்ணாவின் வலது கையில் தவெக கொடி சொருகப்பட்டிருப்பதை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த தலைவரின் சிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் புதிய கட்சியின் கொடியைக் கட்டியது பெரும் அவமரியாதை எனப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வலுக்கும் கண்டனமும் போலீஸ் விசாரணையும்
தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில், உற்சாக மிகுதியில் அக்கட்சித் தொண்டர்கள் யாராவது இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், திராவிட இயக்கத்தின் முன்னோடியான அண்ணாவின் சிலையைப் போஸ்டர்கள் அல்லது கொடிகள் மூலம் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த போலீசார், சிலையில் இருந்த கொடியை அகற்ற நடவடிக்கை எடுத்ததோடு, இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.