தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டவருக்கு அனைத்து கட்சியினரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் உரையாற்றி ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் பேரவையின் பொறுப்பையும் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவை என்பது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய உயரிய அமைப்பாகும் என்றும், மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான திட்டங்கள் மற்றும் சட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு பேரவைக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சட்டப்பேரவையில் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று கூறிய முதலமைச்சர், “ஒரு உறுப்பினரை மட்டுமே கொண்ட கட்சியாக இருந்தாலும் அவர்களது கருத்துகளுக்கும், பெரும்பான்மை பெற்ற கட்சியின் கருத்துகளுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட வேண்டும். சிறு கட்சிகள், பெரிய கட்சிகள் என்ற வேறுபாடின்றி அனைவரின் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும்,” என்றார்.
நல்ல கருத்துகள் ஏற்கப்பட்டு, தேவையற்றவை நிராகரிக்கப்படும் ஜனநாயகத்தின் இதயமாகவும் மூளையாகவும் சட்டப்பேரவை செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய சபாநாயகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை பாராட்டிய முதலமைச்சர், அவரை அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் கைபிடித்து அழைத்து வந்து ஆசனத்தில் அமர வைத்த மரபின் பின்னணியையும் சுவாரஸ்யமாக விளக்கினார்.
இங்கிலாந்து பாராளுமன்ற மரபை எடுத்துக்காட்டாக கூறிய அவர், மன்னராட்சி காலத்தில் பாராளுமன்றம் மன்னரின் விருப்பங்களை நிராகரித்த செய்தியை தெரிவிக்க வேண்டியவர் ஸ்பீக்கர் என்பதால், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவங்கள் இருந்ததாக கூறினார். இதன் காரணமாக ஸ்பீக்கர் பதவியை ஏற்க யாரும் முன்வராத சூழல் ஏற்பட்டதாகவும், அதனால் புதிய ஸ்பீக்கரை அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் கைகளை பிடித்து அழைத்து வந்து ஆசனத்தில் அமர வைக்கும் மரபு உருவானதாகவும் விளக்கினார்.
“ஜனநாயக முறை உருவான பிறகும் இந்த மரபு தொடர்கிறது. தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவார்கள்,” என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.
இறுதியாக, “பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும், உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
