அதிமுகவில் மீண்டும் இணையப் பலமுறை கதவுகளைத் தட்டியும் எடப்பாடி பழனிசாமியால் நிராகரிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இறுதியில் திமுகவில் தஞ்சமடைந்திருப்பது அக்கட்சியினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
டீக்கடை ஊழியராக இருந்த தங்களை உயரத்தில் அமரவைத்த இயக்கத்திற்கு ஓ.பி.எஸ் துரோகம் செய்துவிட்டதாக அதிமுகவின் ஐடி விங் கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் பெயரால் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது, கட்சிக்குள் இருந்துகொண்டே எதிரணிக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக ஓ.பி.எஸ் மீது குற்றம்சாட்டியுள்ளனர். வளர்த்த இயக்கத்தின் கதவை எட்டி உதைத்துவிட்டுப் போயிருக்கும் ஓ.பி.எஸ், செய்த துரோகத்தால் 'அரசியல் அனாதை'யாக மாறிவிட்டதாக அதிமுகவினர் பதிவிட்டுள்ளனர்.
எம்ஜிஆர் மாளிகையில் இருந்துகொண்டே எதிரணியின் கொள்கைகளைப் படித்துக் கொண்டிருந்த ஓ.பி.எஸ், பசுத்தோல் போர்த்திய ஓநாய் போல நடத்திய நாடகம் அம்பலமாகிவிட்டதாக அதிமுகவினர் சாடியுள்ளனர். தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டு அதிமுக வேட்டியைக்கூடக் கட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், இறுதியில் வேறு வழியின்றி தன் மானத்தை இழந்து 'முதலாளி'யின் வாசலைத் தேடிச் சென்றுவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வெட்கமில்லாமல் மானங்கெட்டுத் திரியும் ஓ.பி.எஸ் போன்ற பச்சோந்திகளுக்கு 'அம்மா'வின் பெயர் இனிப் பொருந்தாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 'தர்ம யுத்தம்' என்ற பெயரில் அவர் நடத்தியது துரோகத்திற்கான நாடகம் என்றும், அவரை நம்பி ஏமாந்த தொண்டர்களின் பாவம் அவரைத் தலைமுறைக்கும் தொடரும் என்றும் அதிமுகவினர் கடுமையான வார்த்தைகளால் விளாசியுள்ளனர்.
