அதிமுகவில் கட்சிக்கு துரோகம் செய்ததாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் பலரின் பதவியைப் பறித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி லீமா ரோஸின் பதவியை பறிக்காதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்து 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த தேர்தலில் அக்கட்சி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக ஜெயலலிதா மறைவுக்குப் பின் பல தேர்தல்களில் தோற்றுவிட்டதால் கட்சிக்குள் பிளவு உண்டாகி எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தி உண்டானது. இதனிடையே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் அவர் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை நாடினார். அதேசமயம் அதிமுகவில் ஒரு தரப்பு விஜய்க்கு வாண்டட் ஆக வந்து ஆதரவு கொடுத்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இப்படியான பிரச்னை சென்று கொண்டிருந்த நிலையில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக போவதாக தகவல் வெளியானது. இது மிகப்பெரிய அளவில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மே 10ம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். மே 11 முதல் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. முதல் நாளிலேயே அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்து வந்தனர். 2ம் நாளில் சபாநாயகர் தேர்வின்போது கட்சிக்கு ஒருவர் பேசலாம் என்ற நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி இருவரும் பேசினர். இந்த நிலையில் மே 13ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்பதாக அறிவித்தார். ஆனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். இது அதிமுகவில் கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ.வாகி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு கொடுத்த 25 பேர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என பலரின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். ஆனால் இதில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த லால்குடி தொகுதி எம்.எல்.ஏ., லீமா ரோஸ் மட்டுமே தப்பியுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏன் எடப்பாடி பழனிசாமி லீமா ரோஸூக்கு கருணை காட்டியுள்ளார்?, இதன் பின்னால் திரை மறைவில் ஏதேனும் திட்டம் உள்ளதா?, இபிஎஸ் ஆதரவாளராக த்ன லீமா ரோஸ் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு சென்று உளவு பார்க்கிறாரா என்றெல்லாம் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
காரணம் லீமா ரோஸ் தேர்தலுக்கு ஒருமாதம் முன்பு தான் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு மகளிரணியில் இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக அறியப்பட்ட லீமா ரோஸ் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் தேர்தலுக்கு கணிசமான தொகையை அவர் அதிமுகவுக்கு நன்கொடையாக வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் லீமா ரோஸ் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இல்லாமல் எதிர்தரப்பு முகாமில் சென்று சேர்ந்தார். அந்த தரப்புக்கும் பொருளாதார உதவியை இவர் தான் செய்வதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் லீமா ரோஸ் இரண்டு தரப்புக்கும் இடையே இருந்து செயல்படுவதாக சொல்லப்படுகிறது. கட்சியின் பிளவுக்கே லீமா ரோஸ் தான் காரணம் என கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் லீமா ரோஸின் குடும்ப தொழிலான லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பழிவாங்கும் பொருட்டு தான் லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் அரசியல் களத்தில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கி வருகிறது.
