TVK Vijay | தவெகவுக்கு வரும் 7 MLAக்கள்.. விஜய் போடும் கணக்கு... திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி!

தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சியை நடத்தி வரும் நிலையில் தனித்து பெரும்பான்மை பெறும் முடிவில் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.

G

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
TVK Vijay | தவெகவுக்கு வரும் 7 MLAக்கள்.. விஜய் போடும் கணக்கு... திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி!

அதிமுகவில் இருந்து விலகி 3 எம்எல்ஏ.,க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் சில எம்எல்ஏக்கள் தவெகவிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்த சூழலில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இணைந்துள்ளது.

அதிமுகவில் ஒரு பிரிவு விஜய்க்கு ஆதரவு

இப்படியான நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக மாறியது. அதிமுக எம்எல்ஏக்கள் கட்சிக்கு துரோகம் செய்வதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். அவர்களின் பதவிகளையும் பறித்திருந்தார்.

தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்

இந்த சூழலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வெற்றி பெற்ற ஜெயக்குமார் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் இன்று திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இது தமிழ்நாடு அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. குதிரை பேரம் நடந்துள்ளதாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் முதலமைச்சர் விஜய்யையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் சரமாரியாக சாடியுள்ளனர்.

காலியான 4 தொகுதிகள்

மூவரும் சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்த நிலையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய நான்கு தொகுதிகள் காலியாக மாறியுள்ளது. விரைவில் இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மேலும் சில எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் போடும் பெரும்பான்மைக்கான கணக்கு

ஏற்கனவே 107 எம்எல்ஏக்களை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 11 பேர் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது நான்கு தொகுதிகள் காலியாக மாறிவிட்டது. மீதி பெரும்பான்மைக்கு தேவையுள்ள எண்ணிக்கை அடிப்படையிலான எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதன் மூலம் அந்த தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும். இதன் மூலம் எந்த கட்சியின் தயவு இல்லாமல் தனி பெரும்பான்மையுடன் நாம் ஆட்சி செய்யலாம் என தவெக திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து மூன்று எம்எல்ஏக்கள் விலகி இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் வலை விரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவியேற்ற 14 நாட்களில் மூன்று எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு திருப்பங்கள் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என தெரியாமல் மக்கள் விழிபிதுங்கியுள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...