தமிழ்நாட்டில் தவெகவின் 2 வார ஆட்சியைப் பார்த்து திமுகவும், அதிமுகவும் ஆடிப்போய் இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து கடந்த மே 10ம் தேதி புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சி, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் உள்ளிட்ட இதுவரை இல்லாத வகையில் அரசியல் களத்தை தவெக அரசு மாற்றியமைத்துள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக திமுக மற்றும் அதிமுக சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த அரசு ரீல்ஸ் அரசாக செயல்படுவதாக அக்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
15 நாள் ஆட்சியைக் கண்டு திமுக, அதிமுக நிலைமை
அதில், “தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைத்துச் சுரண்டிய தீய சக்தியும், ஊழல் சக்தியும் 15 நாள் தூய ஆட்சிக்கே ஆடிப்போய் இருக்கிறார்கள்.
ஒரு நிர்வாகத் துப்புரவை நடத்திக் கொண்டிருக்கிறார் வெற்றித்தலைவர் விஜய். அந்தத் துப்புரவில் 60 ஆண்டுகளாய் அகப்படாத ஆவணங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன; அகலவாய்த் திருடர்களின் சுரண்டல்களும் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. டாஸ்மாக் ஊழல் துர்நாற்றம் களையப்பட்டு வருகிறது. இதுவரை அடித்த கொள்ளை, மக்கள் முன் விளக்கப்பட்டு வருகிறது.
மின் துறையில் எரிபொருள், உபகரணம், மின் மாற்றி, துணை மின் நிலையம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் கொள்முதல், மின் துறை ஊழியர்கள் என ஷாக்கடிக்கும் ஊழல்களை சலவைக்குப்போட்டு வெளுத்து எடுத்துக்கொண்டிருக்கிறது வெற்றிக்கழக அரசு.புகைப்படக்கலைஞர் முதல் உயர்நிலை அரசு செயலாளர் வரை அத்தனை நியமனங்களும் ஒழுக்கமான, நேர்மையான நிர்வாகம் என அசைக்க முடியாத வரையறைக்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நிர்வாகம் சுத்தமாகும்
தலை சுத்தமாக இருந்தால் தான், உடல் சரியாக இயங்கும். தலைமைச்செயலகம் என்கிற தமிழ்நாட்டின் நிர்வாகத்தலையை, மூளையை பீடித்திருந்த 'ப்ரோக்கர்' கலாச்சாரத்தை வெற்றித்தலைவர் அரியணையில் ஏறிய அடுத்து சில நாட்களுக்குள் அடியோடு ஒழித்திருக்கிறார். இனி வரும் எந்தக்காலத்திலும் ஊழல், கமிஷன், கையூட்டு இந்த வார்த்தைகளுக்கே இடமில்லை என்ற நிலையை தமிழ்நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறார் மனசாட்சியுள்ள மக்களாட்சியின் முதலமைச்சர்.
இந்த களையெடுப்பு நிர்வாகம், ஊழலிலும் சுரண்டலிலும் ஊறித்திளைத்து மாறி மாறி ஊழல் டீலிங் ஆட்சி நடத்தியவர்களின் தூக்கத்தையும், கனவுகளையும் குலைத்துப்போட்டிருக்கிறது. விரைவில் தமிழ்நாடு நிர்வாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டிருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
