தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாக முறைகேடு புகார்கள் வெளிவந்த வண்ணம் இருப்பது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன் 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் உள்ள கடந்த கால திமுக ஆட்சியின் செயல்பாடுகள் பற்றியும், அதில் நடந்த முறைகேடுகள் பற்றியும் வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.
தலைவலியாக மாறும் அதிகாரிகள்
இந்த நிலையில் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைபெறும் முறைகேட்டை கண்டறிந்து அது தொடர்பாக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தினந்தோறும் பல்வேறு விதமான புகார்கள் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சென்றடைகிறது. அவற்றின் மீது உரிய விசாரணை நடைபெற்று நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படுகிறது.
ஆனால் பிரச்சனைகள் குறைந்தபாடில்லை. முறைகேடு நாளுக்கு நாள் பெரிதாக அம்பலமாகி கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் என்ன நிர்வாகம் நடத்தியது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என விஜய் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதேசமயம் விஜய்க்கு ஒத்துழைக்க அதே அரசு துறையில் உள்ள ஊழியர்கள் சிலர் வெளிப்படையாகவே மறுப்பு தெரிவிக்கின்றனர்.
டிரான்ஸ்பர் மட்டுமே நடக்கிறது
இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் கடந்த திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளுக்கான பணிகள் தொடர்பான ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்சி வேண்டுமானால் மாறலாம். ஆனால் அதிகாரிகள் மாற மாட்டார்கள். தவறு செய்யும் அதிகாரிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள் என தெரிவித்தார். இதனால் தவறு செய்யும் அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை இல்லாமல் அவர்களை பணியை விட்டே நீக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை முதலிலேயே செய்திருந்தால் ஒவ்வொரு துறையிலும் லஞ்சம், ஊழல் போன்ற பிரச்னைகள் இருந்திருக்காது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
