வடமாநில பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. திமுக மீது அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக மற்றும் அதிமுக இந்த மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக தருவோம் எனவும், தமிழக வெற்றிக் கழகம் ரூ.2,500 ஆக தரப்படும் எனவும் அதிரடியாக அறிவித்தது.

G

எழுதியவர்

59 நிமிடங்களுக்கு முன்
வடமாநில பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. திமுக மீது அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு!

வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பெண்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தனக்கு புகார் வந்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும் முன் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகள் கழித்து 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து பெண்களுக்கும் என இல்லாமல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் என மாற்றப்பட்டது. அதிலும் தகுதி இருந்தும் பல பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முறையாக கிடைக்கவில்லை. இந்த சூழலில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் திமுக மற்றும் அதிமுக இந்த மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக தருவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் புதிதாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் ரூ.2,500 தரப்படும் என அதிரடியாக அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில் எப்போது மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நிதியமைச்சர் மரிய வில்சன் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்

ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது?

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், “தவெக தேர்தல் வாக்குறுதியில் மகளிருக்கு ரூ.2500 மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “வரும் முதல் பட்ஜெட்டின்போது அதற்கான அறிவிப்பு வெளியாகும்” என மரிய வில்சன் தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுகவில் இருந்து நிறைய பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைகிறார்கள். இதனை கூட்டணி கட்சிகளே கடுமையாக விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு, “இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் ஒரு கட்சிக்கு வரலாம், போகலாம். அவர்களை வரவேற்கலாம்” என அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.

வடமாநில பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைத்தொகை

அடுத்ததாக, கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதில் ஏராளமான பெண்கள் விடுபட்டிருந்தனர். இந்த முறையும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தான் உரிமைத்தொகை செல்லுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது மக்களிடம் இருந்து ஒரு ரிப்போர்ட் கிடைத்தது. அதில் முக்கியமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது வடமாநிலத்தில் இருந்து வந்து இங்கு வசிப்பவர்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை சென்றுள்ளது. அதுதொடர்பான அறிக்கையை நான் கேட்டுள்ளேன். அதன்மீது நடவடிக்கை எடுப்பேன்” என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...