பழம்பெரும் அமைச்சர்கள் திராவிட இயக்க வரலாறுகளை அறியாத தற்குறிகள் என மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி கடுமையாக சாடியுள்ளார். அவர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து வெளியிட்ட பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரமேஷ் - அனிதா ராதாகிருஷ்ணன் கருத்து மோதல்
திருச்செந்தூர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார். இதற்கு முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார். அவரது கண்டன அறிக்கையில் அமைச்சர் ரமேஷின் சாதி பெயரை குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது. இதற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அனிதா ராதாகிருஷ்ணனை வன்மையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக நீண்ட பதிவு ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
திராவிட வரலாறை அறியாத தற்குறிகள்
அதாவது, “கவின் கொலைக்கு நியாயம் கேட்க வராத அனிதா ராதாகிருஷ்ணன், அர்ச்சகர் சுரண்டலுக்கு நியாயம் கேட்க வந்துள்ளார். இவ்வகையான ஒட்டுண்ணி, பார்ப்பனிய, சாதிய அரசியலைச் செய்த முன்னாள் அதிமுக, இன்னாள் திமுகவினரால் ஏற்பட்ட சேதங்களை தேர்தல் சொன்னது. 'திரிசுதந்திரர்' எனும் பார்ப்பன அர்ச்சகர்கள் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் அறியாதவரா?
இளம் தலைமுறையை அரசியல்படுத்தாமல் போனதாலேயே, சமூகநீதி அரசியல் புதுத்தலைமுறை அறியாமல் போனதென்கிறார்கள். ஜென்-ஜீ தலைமுறைக்கு அரசியலை சொல்லிக்கொடுக்காமல் போனதால் தோற்கவில்லை, பழம்பெரும் அமைச்சர்கள் திராவிடர் இயக்க/கொள்கை வரலாறே அறியாத தற்குறிகளாக இருந்தார்கள் என்பதுதான் அடிப்படை காரணம்.
திமுகவை பின்னுக்கு இழுக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்
உண்மை அதுமட்டுமல்ல, திராவிடம் எனும் பெயரை வைத்துக்கொண்டு, திராவிடத்தை-பெரியாரை-அண்ணாவை கற்காத, அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்கள் சார்ந்த பழைய தலைமுறையே, திமுகவினை பின்னுக்கு இழுத்தது. இன்றும் இழுத்துக்கொண்டிருக்கிறது. இப்படியாக எவ்வித திராவிட அரசியல் அறியாத அமைச்சர்கள் பட்டியலை தயாரித்தால், ஒரு சில பெயர்களைத் தவிர பெரும்பாலான அமைச்சர்களை பட்டியலில் காண இயலும்.
திராவிடர் இயக்க வரலாறு, பெரியாரியல், திராவிடர் இயக்க எழுத்துக்கள், உரைகள் பற்றிய விவரங்களெல்லாம் தெரியாத முன்னாள் அதிமுகவினரை, பெரியார் திடலுக்கு அரசியல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைப்பது நல்லது. திராவிடர் இயக்கப் பெயரை களங்கப்படுத்தும் அரசியல் புரிதலற்ற முன்னாள் அமைச்சர்களுக்கு பெரியார் திடல் நடத்தும் கருத்தரங்கு, விடுதலை இதழ், பயிலரங்கு ஆகியவற்றில் கட்டாயம் பங்கெடுத்து, படித்து பாஸ் செய்ய வேண்டும் எனும் கட்டுப்பாட்டை விதிக்காமல், திமுக தன்னுடைய சரிவை மீட்டெடுக்க இயலாது. சீமான் வீட்டுக்குச் சென்றவர், அவரிடத்தில் பார்ப்பன கடப்பாரையை இரவல் வாங்கி வந்துள்ளாரா அனிதா ராதாகிருஷ்ணன்?” என விமர்சித்துள்ளார்.
